நல்ல தீனியும் கிடைச்சாச்சு .. தங்குவதற்கும் இடம் கிடைச்சாச்சு ... என நல்லதம்பியாக அமைதியாக வலம் வரும் சின்னத்தம்பி வனத்துறைக்கும் டிமிக்கி கொடுக்கிறான். இதனால் சின்னத்தம்பி யானையை என்ன செய்வது என்ற குழப்பத்தில் வனத்துறையினர் ராப்பகலாக தவிக்கின்றனர்.
முரட்டுத்தனமாக, வலுக்கட்டாயமாக வனப் பகுதிக்கு அப்புறப்படுத்தினாலும் சின்னத்தம்பி யானை மீண்டும் ஊருக்குள் வந்து 6 நாட்களாகி விட்டது. வனத்துறையினர் விரட்ட, சின்னத்தம்பி ஓட என முதல் 3 நாட்கள் ஒரே ஓட்டம் தான். ஆனால் கடைசி வரை சின்னத்தம்பி கோபமே படவில்லை. யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. கடைசியாக மடத்துக்குளம் அருகே சர்க்கரை ஆலை வளாகத்தில் தஞ்சமடைந்தான்.
சுற்றிலும் நல்ல விளைந்த கரும்புக்காடு... ருசியான கரும்பு... குடிக்கத் தண்ணீர்... மறைவாக ஒளிய புதர்... என வசதியான இடம் கிடைத்த சந்தோசத்தில் கடந்த 3 நாட்களாக அங்கேயே தங்கிவிட்டான் சின்னத்தம்பி.
எளிதில் பிடித்து விடலாம் என்று கும்கி யுடன் வந்த வனத்துறையினருக்கு நன்கு தண்ணி காட்டுகிறான் சின்னத்தம்பி . தன்னைப் பிடிக்க வந்த சண்முகம், கலீல் என்ற இரண்டு கும்கிகளையும் கரும்பைக் காட்டி நண்பனாக்கி விட்டான். எல்லாம் சேர்ந்து ஒன்றாக விளையாட ஆரம்பித்து விட்டன.
கோர்ட்டும் துன்புறுத்தக்கூடாது. கும்கியாக மாற்ற முயற்சிக்கக் கூடாது என்று கூறி விட்டது. போதாக்குறைக்கு பொது மக்களிடமும் சின்னத்தம்பிக்கு ஆதரவு பெருகி #Save Chinnatambi என போஸ்டர், பேனர் வைக்குமளவுக்கு சென்று விட்டது.
மேலும் சின்னத்தம்பியை இனிமேல் காட்டுக்குள் விட்டாலும் மீண்டும் மீண்டும் திரும்பி வரத்தான் செய்வான் என வன விலங்கு நிபுணர்களும் கூறுகின்றனர்.
இதனால் இனி வலுக்கட்டாயமாக சின்னத்தம்பியை அப்புறப்படுத்துவதும் முடியாது என்ற நிலையில் சின்னத்தம்பியை ராப்பகலாக 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வெறுமனே காவல் காத்து வருகின்றனர். அடுத்து என்ன செய்வது என்றும் தெரியாமல் பெரும் குழப்பத்திலும் உள்ளனர்.