ஜனவரி மாதம் 29ம் தேதி சரவணா ஸ்டோர்ஸ், ரேவதி குழுமங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சரவணா ஸ்டோர்ஸ் குழுமம் மற்றும் பெரம்பூரில் செயல்படும் ரேவதி குழும நிறுவனங்களின் கணக்குகளை வருமான வரித்துறைக்கு சரிவர தெரிவிக்காமல் வரி ஏய்ப்பு செய்து வந்ததாகத் தகவல் கிடைத்ததின் அடிப்படையில் ரெய்டு அரங்கேறியது.
இதில் முக்கிய நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்த வருமான வரி விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது பல நிறுவனங்களில் வருமானத்துக்கு ஏற்ப வரி செலுத்தாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சரவணா ஸ்டோர்ஸ் நகைக் கடை, துணிக் கடை, பாத்திரம், பர்னிச்சர் என பல்வேறு கடைகளில் சோதனை நடந்தது. சரவணா ஸ்டோர்ஸ் உறவினர் பெரம்பூரில் நடத்தி வரும் ரேவதி குழும நிறுவனங்களான ரேவதி நகைக்கடை, ஜவுளிக் கடை, ரேவதி சூப்பர் மார்க்கெட், ரேவதி பர்னிச்சர் மற்றும் பாத்திரக்கடை, வீடு என 8 இடங்களிலும் ரெய்டு நடந்தது.
அதேபோல், சென்னையில் சேத்துப்பட்டிலுள்ள அலுவலகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திமுக குடும்ப கோஷ்டிகள் பங்குதாரர்களாக இருப்பதாகச் சொல்லப்பட்ட நிறுவனங்களை குறிவைத்து ரெய்டு நடந்ததாகத் தகவல் வெளியானது. தேர்தல் நெருக்கத்தில் வாக்காளர்களுக்குப் பெரும் பணத்தை திமுக செலவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தாகவும் சொல்கின்றனர்.
இதனால் தொழில் நிறுவனங்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது திமுகவின் ‘அக்கா’ தரப்பு தானாம்.
இந்தச் சோதனையில் கிடைத்த ஆவணங்களால் வருமான வரித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியில் உள்ளனர். அதிலும், தி.நகரில் உள்ள பிரபல நிறுவனத்தில் கணக்கில் காட்டப்படாத 500 கோடி ரூபாய் கரன்ஸியாகக் கிடந்ததை அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு பணம் புதைந்து கிடப்பதை அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை.
இதன் பின்னணியை விசாரித்தபோது, வருமான வரித்துறையின் சகல மட்டத்திலும் அந்த நிறுவனத்துக்கு சோர்ஸ்கள் இருந்ததையும் கண்டறிந்துள்ளனர். அடுத்து வரும் நாட்களில் அதிரடிகள் அரங்கேறும் என்கின்றனர் ஐ.டி அதிகாரிகள்.
-அருள் திலீபன்