தமிழக அரசின் 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.தமிழகத்தின் கடன் சுமை ரூ.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் வர உள்ளதால் பொதுவாக மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட் முன்கூட்டியே இன்று தாக்கல் செய்யப்பட்டது. 8-வது முறையாக துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ பிஎஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை 14 ஆயிரத்து 319 கோடி ரூபாய் எனவும் நிதிப் பற்றாக்குறை 3% கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் மொத்தக் கடன் சுமை 3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது எனவும், கடந்த நிதியாண்டில் ரூ.44 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்ட நிலையில் நடப்பாண்டில் 43 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட திட்டம் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ.10 ஆயிரம் கோடி, சென்னையில் ஆற்றோரம் வசிப்போருக்கு 38 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியை தலைமையகமாகக் கொண்ட புதிய மாவட்டம் விரைவில் உருவாக்கம் பெறும் என்றும், மதுரை மாவட்டம் திருமங்கலத்தைத் தலையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்ல் பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமாக அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.