தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கரும்புலிகள் படங்களை தொகுத்து காஷ்மீரின் புல்மவாவில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்கள் என தமிழகத்தின் சில இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் துணை இராணுவப் படையினர் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் 41 இந்திய ராணுவ வீரர்கள் தேசத்துக்காக உயிர் நீத்தனர்.
இந்திய துணைக் கண்டத்தையே உலுக்கியிருக்கிறது இச்சம்பவம். இத்தாக்குதல் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள், சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வந்தவாசி உள்ளிட்ட சில இடங்களில் “தமிழ்நாட்டுக்காக வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு எங்களது கண்ணீர் அஞ்சலி” என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதாவது காஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் போஸ்டராம். ஆனால் அந்த படத்தில் இடம்பெற்றுள்ள அத்தனை வீரர்களுமே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்படையை சேர்ந்த கரும்புலி வீரர்கள்.
இந்த அறிவுக்கொழுந்தான படம்தான் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.