அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 இடங்கள் வரையில் கொடுக்கப்பட இருக்கிறது. 2014 மக்களவைத் தேர்தலில் 14 இடங்கள் வரையில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தேமுதிக, இந்தமுறை கௌரவமான இடங்களாவது கொடுக்கப்பட வேண்டும் என அதிமுக தரப்பிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக சுதீஷிடம் பேசிய எடப்பாடி ஆதரவாளர்கள், கடந்த 2 தேர்தல்களிலும் உங்கள் வாக்குவங்கி அதல பாதாளத்துக்குப் போய்விட்டது. கேப்டனின் செல்வாக்கு என்பது முன்பு போல இல்லை.
நாங்கள் ஒதுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் கேட்பது போல சேலம் தொகுதியை விட்டுத் தர முடியாது எனக் கூறியுள்ளனர். இதனை எதிர்பார்க்காத சுதீஷ், பாமக அளவுக்காவது எங்களுக்கு சீட் ஒதுக்குங்கள் எனக் கேட்டிருக்கிறார். இதற்கும் மறுப்பு தெரிவித்த எடப்பாடி அண்ட் கோ, உங்களுக்கு உரிய தொகுதிகளைத் தருகிறோம். தேர்தல் செலவுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
நீங்கள் இழந்த வாக்குசதவீதத்தை மீட்கப் போகும் தேர்தலாக இது இருக்கும். சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை ஒதுக்குகிறோம் என சமாதானம் பேசியுள்ளனர். இறுதியாக 5 இடங்களுக்கு ஓ.கே சொல்லியிருக்கிறார் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ்.