அதிமுக கூட்டணி இழுபறியில் நீடிப்பதற்குப் பாமகவையும் தேமுதிகவையும் குறை சொல்கின்றனர் பாஜக பொறுப்பாளர்கள். நாகர்கோவிலுக்குப் பிரதமர் மோடி வருவதற்குள் கூட்டணியையும் தொகுதிப் பங்கீட்டையும் அறிவித்துவிட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை.
இந்த இரண்டு கட்சிகளால் அறிவிப்பு தாமதமாகிக் கொண்டிருப்பதால் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். இதைப் பற்றிப் பேசும் கமலாலய பொறுப்பாளர்கள், பாஜக அணியைத் தவிர பாட்டாளி மக்கள் கட்சிக்கும் தேமுதிகவுக்கும் வேறு போக்கிடம் இல்லை. திமுக தரப்பில் பேசிக் கொண்டிருக்கிறோம் என அன்புமணி தரப்பில்தான் வதந்தியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராகத்தான் இப்படியொரு வேலையைச் செய்து வருகிறார்கள். தொகுதிப் பங்கீட்டில் தேமுதிக வைக்கும் டிமாண்டுகளை எல்லாம் வெளியில் உள்ளவர்கள் நம்ப மாட்டார்கள்.
சேலம் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார் சுதீஷ். இந்தத் தொகுதி முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதி என்பதால் இதனை விட்டுத்தர அதிமுகவினர் விரும்பவில்லை.
இதே தொகுதியை ராமதாஸும் எதிர்பார்க்கிறார். இதைவிடக் கொடுமை, 2014 மக்களவைத் தேர்தலில் 14 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. இந்தமுறை 8 தொகுதிகளையாவது விட்டுக் கொடுங்கள் எனக் கேட்கிறார் சுதீஷ்.
நாங்களும், எட்டு தொகுதிகளில் போட்டியிடும் அளவுக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா எனக் கேட்டால், அதற்கு தேமுதிக தரப்பில் பதில் இல்லை. தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமிதான் செலவு செய்யப் போகிறார். செலவு செய்ய முடியாது என தேமுதிக ஒதுங்கிவிட்டது. அப்படியிருக்கும் 8 தொகுதிகளை எதிர்பார்ப்பதெல்லாம் ரொம்ப ஓவர். தொகுதி நிலவரத்தைப் புரிந்து கொள்ளும் நிலையிலும் தேமுதிக இல்லை என்கிறார்கள் கடுகடுப்பான குரலில்.
- அருள் திலீபன்