மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி மண்ணைக் கவ்வ வேண்டும் என்பதில் காடுவெட்டி குரு ஆதரவாளர்கள் உறுதியாக உள்ளனர். கடந்த தேர்தலில் தருமபுரியில் வெற்றி பெற்ற அன்புமணி, இந்தமுறை அதே தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அவருக்கு ஆளும்கட்சியே அதிகளவில் செலவு செய்ய உள்ளதாகத் தகவல் வந்துள்ளது. தருமபுரி தொகுதியில் பாமக வாக்குகள் என்பது வன்னியர் சங்கத்தின் வாக்குகள்தான். காடுவெட்டி குரு மரணத்துக்கு அன்புமணி பதில் சொல்ல வேண்டும் என்பதை பிரசாரமாக முன்வைக்க உள்ளனர் பாமக எதிர்ப்பாளர்கள்.
இதற்காக காடுவெட்டி குருவின் அம்மாவை வேட்பாளராக முன்னிறுத்தவும் முயற்சி நடந்து வருகிறது. இந்த முயற்சிகளின் பின்னணியில் திமுக இருப்பதாகப் பாமக பொறுப்பாளர்கள் நம்புகின்றனர்.
வடக்கு மாவட்டங்களில் பாமகவுக்கு எதிராக குரு குடும்பத்தைக் கொம்புசீவிவிடும் வேலையில் வடக்கு மண்டல திமுக மாசெக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பணபலம், அரசு இயந்திர பலத்தோடு அதிமுக, பாமக வந்தால், அவர்களுக்குப் பதிலடி கொடுப்பதற்கு காடுவெட்டி குரு குடும்பமே போதும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
இதன்மூலம், தருமபுரி, ஆரணி, அரக்கோணம் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் எனவும் அவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். இதனை அறிந்த பாமகவும், மாவீரன் குருவைக் காப்பாற்ற மருத்துவர் அய்யா செய்த உதவிகள் என்னென்ன என்பதைப் பற்றி விளக்கமாக பொதுக்கூட்டங்களில் பேசுவது, சமுதாயத் தலைவர்களிடம் விளக்குவது என தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்க இருக்கிறார்களாம்.
எழில் பிரதீபன்