``கார் மேகம் உள்ளவரை, கடல் உள்ளவரை, தமிழ் உள்ளவரை அ.தி.மு.க., தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை" இப்படி அறிவித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸே இதை உதறித்தள்ளிவிட்டு அ.தி.மு.கவுடன் இணைந்துவிட்டார். இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி ஒப்பந்தம் கையொப்பமாகி தொகுதி பங்கீடும் முடிந்துவிட்டது. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.கவுக்கு 7 நாடாளுமன்றத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டு தற்போது அ.தி.மு.கவுடன் பா.ம.க. கூட்டணி அமைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பா.ம.க மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலரும் அந்தக் கட்சியை கடுமையாக விமர்சிக்க தொடங்கியிருக்கிறார்கள். ``கடந்த 2009 மக்களவைத் தேர்தலிலேயே தோற்றுப் போன கூட்டணி தான் அ.தி.மு.க-பா.ம.க கூட்டணி. ராமதாஸுக்குக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை கிடையாது. நாட்டைப் பற்றிய அக்கறை இல்லாத ராமதாஸ், பணத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவர்" என்று கடுமையாக தலைவர் ஸ்டாலின்.
இதேபோல் நெட்டிசன்களும் அந்தக் கட்சியை வறுத்தெடுக்க தொடங்கியுள்ளனர். ஸ்டாலினை தொடர்ந்து அவரது மகன் உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில் சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிராக அதிமுகவை கடுமையாக விமர்சித்து அன்புமணி பேசிய வீடியோவை பதிவிட்டு கூடவே ``மானம்கெட்டவனுங்க'' எனறும் #மண்டியிட்டமாங்கா என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே பாமகவை விமர்சிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த #மண்டியிட்டமாங்கா ஹேஷ்டாக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.