தேமுதிக உட்பட சில கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு நடந்து வருவதாக சேலத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையாக சீட் கேட்பதால்தான் தேமுதிகவை சேர்த்துக் கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது என்கிறார்கள் ஆளும்கட்சி தரப்பில்.
எப்படியாவது தேமுதிகவைக் கொண்டு வாருங்கள் என பாஜக உட்பட நான்கு முனைகளில் இருந்தும் அதிமுகவுக்கு அழுத்தம் வருகிறது. இதைப் பற்றி பாமக பொறுப்பாளர்கள் கேட்டபோது, 'அவர்கள் கேட்கும் இடங்களைக் கொடுப்பதில் சிக்கல் இருக்கிறது. உங்கள் சீட்டைக் குறைத்துக் கொண்டால், அவர்களுக்குக் கொஞ்சம் கொடுக்கலாம்' என அதிமுக தரப்பில் விளக்கம் கொடுத்ததை பாமக தரப்பில் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் டெல்லி பிஜேபியோ, 2014 மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையில் மெகா அணியாக உருவெடுத்தோம். இந்தமுறை அப்படியொரு கூட்டணி உருவானால்தான் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு இணையாக நாம் செயல்பட முடியும்.
அவர்களைக் கொண்டு வரும் வேலைகளைத் தொடங்குங்கள். காங்கிரஸ் பக்கம் அவர்கள் சென்றுவிடக் கூடாது எனக் கூறியுள்ளனர். அதனால்தான், தேமுதிக வராவிட்டாலும் கவலையில்லை என ஜெயக்குமார் பேச்சுக்கு, சேலத்தில் வைத்துப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டதாம்.