கமல்ஹாசன் கஜானாவை நோக்கிச் சென்றாலும் ஏமாற்றமே மிஞ்சும் என்று பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 21-ம் தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்கப்போவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சுற்றுப்பயண ஏற்பாடுகள் குறித்து கமல்ஹாசன் ஆலோசனைக் கூட்டத்தை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “ரசிகர்களை சந்திப்பது வழக்கமானது என்றாலும், தற்போது அதன் இலக்கு மாறியுள்ளது. இந்த பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல, மக்களை நோக்கி செல்வது” என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இதற்கு எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், "#கமல்ஹாசன் கஜானாவை நோக்கிச் சென்றாலும் ஏமாற்றமே மிஞ்சும். அது சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டு விட்டது" எனப் பதிவிட்டுள்ளார்.
அரசு கஜானா ஏற்கனவே காலி செய்யப்பட்டுவிட்டது என்று எஸ்.வி.சேகர் கூறியிருப்பது நடிகர் கமல்ஹாசனை கிண்டல் செய்யவா அல்லது தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தா என்ற கேள்வியை அரசியல் ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.