ஸ்டாலினிடம் தொகுதி கேட்டு திருநாவுக்கரசு கெஞ்சல் !

Thirunavukkarasar to contest in LS Polls

Mar 3, 2019, 13:25 PM IST

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு உட்பட சில முக்கிய தலைகளுக்கு இந்த முறை தேர்தலில் நிற்க வாய்ப்பு தரக்கூடாது என்கிற முடிவில் இருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. அதற்கேற்ப, தொகுதிகளை தேர்வு செய்ய வேண்டுமென்பதில் கவனமாக இருக்க வேண்டும் என ப சிதம்பரத்திடம் அறிவுறுத்தியுள்ளார் ராகுல்.

குறிப்பாக, அழகிரிக்கு இந்த முறை சீட் இல்லை. சீட் கேட்கக்கூடாது என்ற உறுதிமொழியை பெற்றுக்கொண்டே தலைவர் பதவி அவருக்குத் தரப்பட்டது. அதேபோல, தலைவர் பதவியில் திருநாவுக்கரசர் நீடிக்கக் கூடாது என விரும்பிய ஸ்டாலின், அவர் போட்டியிடக்கூடிய ராமநாதபுரம் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார் என்கிறது அறிவாலயத் தரப்பு.


அந்த வகையில், வேலூர் தொகுதியைக் கேட்ட முஸ்லீம் லீக்கிற்கு ராமநாதபுரத்தை ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்துள்ளார் ஸ்டாலின். காங்கிரஸ் தலைமைக்கு திமுக அனுப்பி வைத்த தொகுதிகள் பட்டியலில், ராமநாதபுரம் இல்லை.

காங்கிரஸ் காரணம் கேட்டபோது, சிவகங்கையும் ராமநாதபுரமும் அருகருகே உள்ள தொகுதிகள். இரண்டையும் காங்கிரஸுக்கே ஒதுக்கினால் திமுக தொண்டர்கள் அதிருப்தியடைவார்கள். அதனையும் தாண்டி, கூட்டணியில் உள்ள மற்றொரு தோழமைக் கட்சியான முஸ்லீம் லீக், ராமநாதபுரத்தை கேட்பதால் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டியதிருக்கிறது என தெளிவுப்படுத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் ஒதுக்கப்பட்டால் அங்கு திருநாவுக்கரசுதான் சீட் கேட்பார் என உணர்ந்துள்ள காங்கிரஸ் தலைமை, திமுகவின் காரணத்தை ஒப்புக்கொண்டு விட்டது. இதை அறிந்த திருநாவுக்கரசர், கட்சியின் மேலிட பொறுப்பாளரிடம் விசாரிக்க, உங்களுக்குத் தோதான தொகுதியை திமுகவிடம் கேட்டு வாங்கி வாருங்கள். வாய்ப்பு உங்களைத் தேடி வரும் என தெரிவித்திருக்கிறார்.


இந்த நிலையில்தான் நேற்று ஸ்டாலினை சந்தித்தார் திருநாவுக்கரசர். இந்த சந்திப்பு குறித்து அறிவாலயம் தரப்பில் விசாரித்தபோது, எனக்காக ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். ஆனால், அந்த தொகுதி முஸ்லீம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பி வாங்க முடியாது என ஸ்டாலின் சொல்லி விட்டார்.

இதனையடுத்து, திருச்சியை ஒதுக்குங்கள். எப்படியும் நான் சீட்டு வாங்கிவிடுவேன் என சொல்ல, அந்த தொகுதியை வைகோ கேட்கிறார். மதிமுகவுக்கு 1 தொகுதித்தான் ஒதுக்க வேண்டும்னு கட்சியின் சீனியர்கள் வலியுறுத்துகிறார்கள். அப்படியிருக்க, வைகோ விரும்புகிற தொகுதியையாவது ஒதுக்குவதுதானே சரியாக இருக்கும் என ஸ்டாலின் சொல்ல, அவருக்கு விருதுநகர் ஒதுக்கலாமே என சொல்லியுள்ளார் திருநாவுக்கரசர்.

அதற்கு ஸ்டாலினோ, அந்த தொகுதியைத்தான் உங்க கட்சி கேட்கிறதே என்றிருக்கிறார். இதே போலவே சில தொகுதிகளை திருநாவுக்கரசர் கேட்க, அதற்கெல்லாம் ஒவ்வொரு காரணம் சொல்லி மறுத்துள்ளார் ஸ்டாலின். இருப்பினும், ராமநாதபுரம் அல்லது திருச்சி தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை ஒதுக்குமாறு அடம் பிடித்துவிட்டு சென்றுள்ளார் திருநாவுக்கரசர் என்கிறார்கள் திமுகவினர்.

- எழில் பிரதீபன்

You'r reading ஸ்டாலினிடம் தொகுதி கேட்டு திருநாவுக்கரசு கெஞ்சல் ! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை