லோக்சபா தேர்தலில் வாரிசுகளுக்கு கட்சியின் சீனியர்கள் சீட் கேட்டு நச்சரிப்பதால் திமுக தலைவர் ஸ்டாலின் விழிபிதுங்கிக் கிடக்கிறாராம்.
தமது காலத்திலேயே வாரிசுகளை கட்சியில் முன்னணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுவது திமுகவில் தொடர் கதை. திண்டுக்கல் ஐ பெரியசாமி, மகன் செந்தில்குமாரை எம்.எல்.ஏ.வாக்கி மா.செ.வாகவும் உருவாக்கிவிட்டார்.
இதே பாணியில்தான் துரைமுருகன், பொன்முடி, நேரு, எ.வ.வேலு என ஒரு பெரிய பட்டாளமே களமிறங்கியுள்ளது. மகனுக்காக வேலூர் தொகுதியைக் கேட்டு ஸ்டாலினுடன் யுத்தமே நடத்தினார் துரைமுருகன்.
தொடக்கத்தில் இதை பிடிவாதமாக நிராகரித்த ஸ்டாலின், அது முஸ்லிம் லீக் கட்சிக்குத்தான் என திட்டவட்டமாக கூறினார். ஆனால் துரைமுருகன் விடுவதாக இல்லை. அடம்பிடித்து அந்த தொகுதியை வாங்கியேவிட்டார்.
திருச்சி தொகுதியில் வாரிசை நிறுத்த நேரு முயற்சிக்கிறார். ஆனால் அன்பில் மகேஷோ இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். இதனால் மதிமுகவுக்கு திருச்சியை ஒதுக்கும் முடிவில் இருக்கிறதாம் திமுக தலைமை. இதையடுத்து பெரம்பலூர் தொகுதியை வாரிசுக்காக நேரு கேட்டிருக்கிறார்.
அத்தொகுதியை ஐஜேகேவுக்கு கொடுக்கப் போகிறோம் என சொல்லிவிட்டதாம் திமுக தலைமை. இதனால் அன்பில் மகேஷ் தரப்பு மகிழ்ச்சியில் இருக்கிறது. நேருவோ செம கடுப்பில் இருக்கிறாராம். பொன்முடி மற்றும் எ.வ.வேலுவின் வாரிசுகளுக்கு திமுக தலைமை நோ சொல்லிவிட்டது.
இதனால் கடுப்பாகிப் போன பொன்முடி, ஐ. பெரியசாமி மட்டும் மகனுக்கு எம்.எல்.ஏ., மா.செ. பதவி வாங்கித் தரலாம்.. நாங்க வாங்கி தரக் கூடாதா? என கொந்தளித்திருக்கிறார். எ.வ.வேலுவோ, என் மகனுக்கு சீட் தரலைன்னா தேர்தல் வேலை மட்டும் பார்ப்பேன். ஐந்து பைசா செலவு செய்யமாட்டேன் என கூறிவிட்டாராம்.
இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் வாரிசுகளுக்காக சீனியர்கள் மல்லுக்கட்டுவதால் விழிபிதுங்கிக் கிடக்கிறாராம் ஸ்டாலின்.
- எழில் பிரதீபன்