பெங்களூரு: கர்நாடகா பந்த் காரணமாக பெங்களூரில் செயல்பட்டு வரும் விப்ரோ உள்ளிட்ட பல ஐடி நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவா மாநிலத்துடனான மகதாயி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடைபெறும் இந்த பந்த்திற்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான கன்னட அமைப்புகள் ஆதரவு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
பெங்களூரில் மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள உடுப்பி கார்டன் என்ற ஓட்டல் மற்றும் பேக்கரியில் வாட்டாள் நாகராஜ் ஆதரவாளர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதனால், பொது மக்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகள், ஐடி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு நடைபெற்று வரும் தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பெங்களூரில் இயங்கும் விப்ரோ உள்ளிட்ட பெரும்பாலான ஐடி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சிறு நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணிபுரியவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மேலும், முழு அடைப்பு எதிரொலியாக பெருமளவில் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. பெங்களூரில் மெட்ரோ ரயில்கள் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் ஓசூர் உள்ளிட்ட தமிழக எல்லைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.