ஜெயலலிதா மரணம் குறித்து மேலும் சில குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார் அமைச்சர் சிவி சண்முகம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சமீபகாலமாக அதிரடியான சந்தேகங்களை எழுப்பி வருகிறார் அமைச்சர் சிவி சண்முகம். ` மருத்துவர்கள் கூறியும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோகிராம் செய்யப்படவில்லை. ஆனால், அதைச் செய்யவிடாமல் தடுத்தது யார்? ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டாம் எனச் சொன்னது யார்? மத்திய அரசு ஜெயலலிதாவுக்குத் தனி விமானம் தருகிறோம். அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க முழு வசதிகளையும் செய்து தருகிறோம் என்றது. அதைத் தடுத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தால், இந்திய மருத்துவர்களின் மதிப்பு குறைந்துவிடும் எனச் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். ஜெயலலிதாவின் உயிரைவிட, இந்திய மருத்துவர்களின் கௌரவம் முக்கியம் என்று கூறிய ராதாகிருஷ்ணனின் பின்னணியை அறிய வேண்டும்’ என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது விவாத பொருளாக மாறியது.
இந்தநிலையில் தற்போது மேலும் சில குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவர் எழுப்பியுள்ளார். விழுப்புரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ``ஒருவரை விஷம் கொடுத்துதான் சாகடிக்க வேண்டும் என்பது இல்லை. வெல்லம் கொடுத்தும் சாகடிக்கலாம். அதுதான் ஜெயலலிதாவுக்கு நடந்தது. ஜெயலலிதா கடுமையான சக்கரை நோய் உள்ளவர். இப்படி அதிதீவிர சர்க்கரை நோய் உள்ளவருக்கு அதுவும் மருத்துவமனையில் இருக்கும்போது யாராவது அல்வா கொடுப்பார்களா? இவர்கள் கொடுத்தார்கள். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இனிப்பு கொடுக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு என்ன எண்ணம்? நோயின் வீரியத்தை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நோய் முற்றி மரணம் இயற்கையாக நடந்தது போல் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம்" எனக் கூறினார்.