கரூர் லோக்சபா தொகுதி... வெடித்த உட்கட்சி மோதலால் வெற்றியை பறிகொடுக்கும் திமுக?

கரூர் லோக்சபா தொகுதியில் வெடித்த உட்கட்சி மோதலால் வெற்றியை எளிதாக பறிகொடுக்கும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.

கரூர் லோக்சபா தொகுதியில் வேடசந்தூர் சட்டசபை தொகுதியும் அடக்கம். திண்டுக்கல் மாவட்ட எல்லை தொகுதி என்பதால் கரூர் லோக்சபாவுடன் வேடசந்தூர் இணைக்கப்பட்டது.

சட்டசபை தேர்தலில் வேடசந்தூர் தொகுதியை அதிமுகவின் இளம் வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம் கைப்பற்றினார். திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட சுமார் 19,000 வாக்குகள் அதிகம் பெற்றார் பரமசிவம்.

அதே நேரத்தில் பரமசிவத்தின் சமூகமான ஒக்கலிகா கவுடர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக திமுக அணியில் நிறுத்தப்பட்டிருந்தால் களநிலவரம் வேறாக இருந்திருக்கும். இத்தனைக்கும் அதிமுக அதிக வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட எரியோடு பேரூராட்சியில் திமுக செல்வாக்கை காட்டி மிரள வைத்தது.

இந்நிலையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலர் எரியோடு ஜீவா, கட்சி விரோத நடவடிக்கைக்காக தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது திமுகவினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

ஜீவாவுக்கு ஆதரவாக அவர் சார்ந்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து போஸ்டர்களை ஒட்டி உள்ளன. இது குறித்து பேசும் திமுகவினர், கட்சி சாராத விஷயம் ஒன்றில் ஏற்பட்ட மோதலை முன்வைத்து ஜீவா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அது நிச்சயம் அநீதியானது; இது சிலரின் திட்டமிட்ட நடவடிக்கை. இதனால் கடுமையாக பாதிக்கப்படப் போவது திமுகதான்... ஜீவாவுக்கு ஆதரவாக இப்பகுதியில் செங்குத்தான பிளவை திமுக எதிர்கொண்டிருக்கிறது. இதனை இப்போதே திமுக தலைமை சரி செய்யாவிட்டால் கரூர் லோக்சபா தொகுதி கட்சிக்கு இல்லை என்பதை திட்டவட்டமாக எழுதி வைத்துக் கொள்ளலாம் என்கின்றனர்.

மேலும் வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை ஒன்றியங்களில் 40 ஆண்டுகாலமாக திமுகவின் முகமாக இருப்பவர் ஜீவா. அவர் மீதான நடவடிக்கை ஜீரணிக்க முடியாதது என்கின்றனர். அதேநேரத்தில் திமுகவின் இன்னொரு தரப்பு, கட்சி நடவடிக்கை எடுத்தால் அமைதியாக தமது தரப்பை ஜீவா தெரிவித்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஜாதிய அமைப்புகளின் பெயரால் கண்டன சுவரொட்டிகள் ஒட்டுவது எப்படி சரியாகும்? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்