ரஜினியின் ஆலோசகர் வழங்கிய யோசனைகள் தோல்வியில் முடிந்துள்ளன. எனவே ரஜினி அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
மதுரையில் தினகரன் அணி சார்பில் வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், கலந்துகொண்டு பேசிய தங்க தமிழ்செல்வன், “கழக பொதுச் செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோரது காலில் விழுந்து பதவி வாங்கியவர்கள் இன்றைக்கு நம்மை துரோகி என்கிறார்கள். இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்கு ரூ. 6 ஆயிரம் கொடுத்து டெபாசிட் வாங்கிய எடப்பாடி அணியினர் இன்னும் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. கொஞ்சம் அசந்து விட்டோம் என்கிறார்கள்.
இவர்களுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை என்பதை தெரிந்து கொண்ட பாஜகவினர் தமிழக அரசை விமர்சிக்க தொடங்கி விட்டனர். எனவே தினகரன் முதலமைச்சராவது உறுதி. அவரால் மட்டுமே ஊழலற்ற ஜெயலலிதா ஆட்சியை நடத்த முடியும்.
இன்றைக்கு ரஜினி, கமல் அரசியலுக்கு வரப்போவதாக தெரிவித்துள்ளனர். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
ரஜினியின் ஆலோசகர் குஜராத் தேர்தல், 2 ஜி அலைக்கற்றை வழக்கு, ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக ரஜினிக்கு வழங்கிய யோசனைகள் தோல்வியில் முடிந்துள்ளன. எனவே ரஜினி அரசியல் கட்சி தொடங்க மாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.