அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையும் லோக்சபா தேர்தலுடன் நடத்த திமுக வலியுறுத்தல்

DMK urges to hold 3 By Elections with Loksabha Polls

by Mathivanan, Mar 11, 2019, 13:06 PM IST

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்களையும் லோக்சபா தேர்தலுடன் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் 17ஆவது மக்களவைத் தேர்தலுடனேயே சேர்த்து தேர்தல் நடத்திட வேண்டும்.

17ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலும், காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தலும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்றைய தினம் (10.3.2019)அறிவித்திருப்பதை மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வரவேற்கிறது.

ஆனால் தமிழ்நாட்டில் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை மட்டும் தள்ளி வைத்திருப்பது மிகுந்த உள்நோக்கம் நிறைந்த ஜனநாயகத்திற்குப் புறம்பான நடவடிக்கை என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வேதனையுடன் தனது கருத்தைப்  பதிவு செய்கிறது.

'வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மூன்று தொகுதி இடைத் தேர்தல்களை நடத்தவில்லை” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பதற்கு எவ்வித முகாந்திரமோ, ஆதாரமோ, அடிப்படையோ இல்லை என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கருதுகிறது.

குறிப்பாக அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைத் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு - அந்த தகுதி நீக்கம் ஏற்கனவே உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இறுதிக்கு வந்துவிட்டது. அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வேறு தேர்தல் வழக்குகளில் “தேர்தலை நடத்தக் கூடாது என்று எவ்வித தடையுத்தரவும் தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்கப்படவில்லை” என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல் வழக்கிலும் அவ்வாறு தடையுத்தரவு ஏதும் இல்லை. ஆகவே இந்த மூன்று தொகுதிகளிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது அப்பட்டமான வாக்காளர் விரோத நடவடிக்கை. அரவக்குறிச்சியும், ஒட்டப்பிடாரமும் ஏறக்குறைய 18 மாதங்களுக்கு மேலும்,திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி எட்டு மாதங்களுக்கு மேலாகவும் காலியாக உள்ளது.

அத்தொகுதிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழல் தொடர்ந்து வலுக்கட்டாயமாகத்  திணிக்கப்படுவதும், சட்டமன்றத் தொகுதிகளை காலியாக வைத்துக் கொண்டே ஒரு ஆட்சியை “மைனாரிட்டி” அந்தஸ்தில் தொடர அனுமதிப்பதும் ஆரோக்கியமான ஜனநாயக மரபுகளுக்கு ஏற்ற செயலும் அல்ல - அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட செயலும் அல்ல!

ஆகவே அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் 17ஆவது மக்களவைத் தேர்தலுடனேயே சேர்த்து தேர்தல் நடத்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை, தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க கழகம் நேரில் வலியுறுத்தும். அதற்கேற்றவாறு தேர்தல் நடத்த முன் வராவிட்டால், நீதிமன்றம் மூலம் இந்த மூன்று தொகுதிகளின் தேர்தலையும் நடத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இக்கூட்டம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது.

இவ்வாறு திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

You'r reading அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையும் லோக்சபா தேர்தலுடன் நடத்த திமுக வலியுறுத்தல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை