சென்னை: பேருந்து கட்டணத்தை குறைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் வரும் 29ம் தேதி அன்று சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பஸ் கட்டணத்தை திரும்பப் பெறக்கோரி தி.மு.க. சார்பில் 27-1-2018 அன்று (இன்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. அந்த போராட்டத்திற்கு பிறகும் அ.தி.மு.க. அரசு பஸ் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்திடத் தேவையான விரைவு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறுமானால், தி.மு.க. சார்பில் மேலும் தீவிரமாகத் தொடர் போராட்டம் நடத்தப்பட வேண்டும், குறிப்பாக சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆகவே 27-ந் தேதி (இன்று) நடைபெறவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிறகும் பஸ் கட்டண உயர்வை அ.தி.மு.க. அரசு மறுபரிசீலனைக்கு உட்படுத்தாமல், அனைத்துத் தரப்பு மக்களும் படும் துயரத்தைக் கண்டு பரிவுடன் கூடிய அணுகுமுறையைப் பின்பற்ற மறுக்குமேயானால் 29-1-2018 (திங்கட்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதி, ஒன்றியங்கள், நகரங்கள் என மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு சிறை நிரப்பும் போராட்டத்தை தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் நடத்திட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.