காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார். சென்னை நிகழ்ச்சிகளை தொடர்ந்து, மாலையில் நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்களுடன் அவர் பங்கேற்கிறார்.
வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில், திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியன இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகிறார். முதலில், இன்று பகல் 11.30 மணிக்கு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடக்கும் கருத்தரங்கில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். மதியம் 1 மணிக்கு கிண்டியில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
பின்னர், விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து காரில் நாகர்கோவிலில் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு ராகுல் காந்தி செல்கிறார்.
இன்று மாலை 4 மணிக்கு அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தி.க. தலைவர் வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களுடன் ஒரே மேடையில் ராகுல் பேசுகிறார்.