திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.சிதம்பரம் (தனி) தொகுதியில் அக்கட்சித் தலைவர் திருமாவளவனும், விழுப்புரம்(தனி) தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட திருமாவளவன், தங்கள் கட்சிக்கு சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாகத் தெரிவித்தார். மோதிரம் சின்னம் மறுக்கப்பட்ட நிலையில் வைரம் சின்னம் கேட்டோம் அதையும் கொடுக்க வில்லை. தேர்தல் ஆணைய சின்னங்கள் பட்டியலில் கடைசியாக சேர்க்கப்பட்ட பலாப்பழம் சின்னத்தை ஒதுக்குமாறு கேட்டோம். அதையும் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கி விட்டது என்று திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்தார்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக தங்களை கட்டாயப்படுத்தவில்லை என்ற திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் தங்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கும் தனிச் சின்னத்தில் தாம் போட்டியிடுவதாகவும், விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ரவிக்குமார் போட்டியிடுவார் என்றும் வித்தியாசமான அறிவிப்பையும் திருமாவளவன் வெளியிட்டார்.
மேலும் ஆந்திராவில் 6 மக்களவைத் தொதிகளுக்கும், கேரளாவில் 3 தொகுதிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களையும் திருமாவளவன் அறிவித்தார்