பறிபோனது ‘மோதிரம்’.....உதயசூரியனில் நிற்பதில் என்ன தப்பு? திருமாவை உசுப்பிவிடும் விசிக நிர்வாகிகள்

மோதிரம் சின்னத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த திருமாவளவனுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதையடுத்து நட்சத்திர சின்னமா அல்லது வேறு எதாவது சின்னமா என்ற ஆலோசனையில் அக்கட்சி பொறுப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவைத் தேர்தல் தொடர்பாக, திமுக தலைமை வைத்த நிபந்தனையால் வெலவெலத்துப் போயிருக்கிறது சிறுத்தைகள் கூடாரம். இதுதொடர்பாக திருமாவளவனிடம் பேசிய திமுக பொறுப்பாளர்கள் சிலர், உங்களுடைய புதிய சின்னத்தை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைப்பதற்குள் தேர்தல் காலமே முடிந்து போய்விடும்.

எதிர்முகாமில் வலுவான கூட்டணி அமைத்திருக்கிறார்கள். நீங்கள் காட்டும் பிடிவாதத்தால் எதிர் முகாம்தான் வலுவடையும். கொஞ்சம் பிசகினாலும் மோடியே மீண்டும் பிரதமராக வந்துவிடுவார்.

இதற்காகத்தான் இவ்வளவு பாடுபட்டீர்களா...அதற்குப் பதிலாக உதயசூரியன் சின்னத்திலே நின்று தேர்தலை சந்தியுங்கள். இதற்கு நீங்கள் சம்மதம் தெரிவித்தால், தொகுதிகளுக்கான முழு செலவையும் நாங்களே பார்த்துக் கொள்வோம்.

உங்களுக்கும் டெல்லியில் 2 எம்பிக்கள் கிடைப்பார்கள். இதற்கு மறுப்பு தெரிவித்து, சுயேட்சை சின்னத்தில் தான் நிற்போம் எனக் கூறினால், தொகுதிகளுக்கு பத்து பைசாவைக் கூட கொடுக்க மாட்டோம். நூறு கோடி செலவழித்து உங்களுடைய வெற்றியை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இதற்கு மேல் உங்கள் விருப்பம் எனக் கூறியுள்ளனர்.

இதே கருத்தை விசிக நிர்வாகிகளும் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களோ, 'திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெறுவதற்காகவா இத்தனை நாட்களாக தனி அடையாளத்துடன் செயல்பட்டு வருகிறோம். அவர்கள் சின்னத்தில் வென்றால், எந்தவொரு காரியமாக இருந்தாலும் ஸ்டாலினுடன் போய் நிற்க வேண்டியது வரும்' எனக் கூறியுள்ளனர்.

ஆனாலும் திருமாவளவனிடம் பேசும் திமுக ஆதரவு விசிகவினர், அடுத்து உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. அதில் நிறைய இடங்களைப் பெறுவோம். சட்டமன்றத் தேர்தலிலும் அதிக சீட்டுகளைப் பெற்று வலுவான வாக்குகளை வாங்கி, நமது பலத்தை நிரூபிப்போம். அதற்காக மக்களவைத் தேர்தலில் விட்டுக் கொடுத்தாலும் தப்பில்லை. உதயசூரியனிலேயே நிற்போம் எனப் பேசியுள்ளனர்.

-எழில் பிரதீபன்

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்