தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் சென்னை காவேரி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இன்று காலை தனது காரில் சென்று கொண்டிருந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் தொழுப்பேடு டோல்கேட் அருகே வரும் போது அங்கிருந்த ஊழியர்கள் அவரது கார் டிரைவரை தாக்கியதாக கூறப்பட்டது. இதனால் டோல்கேட் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனக் கூறி டோல்கேட் அருகில் அமர்ந்து தர்ணா போராட்டடத்தில் ஈடுபட்டார் வேல்முருகன். பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வேல்முருகன் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
`` FASTAG என்ற முறையில் இந்தியா முழுவதும் சென்று வர அனுமதி பெறப்பட்டுள்ளது. டோல்கேட்டில் செல்வதற்கான அனுமதி பெற்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்த போது டோல்கேட்டில் நிறுத்தப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. டோல்கேட் பணியாளர்களுக்கு தமிழ் சரியாக தெரியாது. ஓட்டுநர் புகாரின் அடிப்படையில் பணியாளர்கள் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது" எனக் கூறப்பட்டது. மேலும் ஊழியர்கள் தான் ஓட்டுநரை முதலில் தாக்கினர் எனவும் கூறப்பட்டது.
இந்தநிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது தான் உண்மை நிலவரம் தெரியவந்துள்ளது. FASTAG ஸ்டிக்கரை படிக்க தெரியததால் ஊழியர் ஒருவர் வேல்முருகனின் கார் ஓட்டுநரிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வேல்முருகனின் கார் ஓட்டுநர் தான் முதலில் சுங்கச்சாவடி ஊழியரைத் தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து சுங்கச்சாவடி ஊழியரும் அவரை பதிலுக்கு தாக்கினார். இதனால் கடுப்பான வேல்முருகன் காருக்குள் இருந்து இறங்கிய உடனே, சுங்கச்சாவடி ஊழியரை தான் அணிந்திருந்த செருப்பை எடுத்து தாக்க முயன்றார். இதனை கண்ட ஊழியர் கை எடுத்து கும்பிட்டுள்ளார். இருந்தும் அவரை விடாமல் விரட்டியவாறே தனது காலணியை கழற்றி கையில் எடுத்து அவர் மீது வீசுகிறார் வேல்முருகன். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சுங்க சாவடி ஊழியர் தான் முதலில் தாக்கினார் எனக் கூறி தர்ணா இருந்த நிலையில் வேல்முருகனின் செயல் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.