கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மெட்ராஸ் முதலை பண்ணையில் உள்ள 4 முதலைகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த முதலைகள் இறப்புக்கு காரணம் அருகில் உள்ள சொகுசு ரெசார்ட்டில் இருந்து எழுப்பப்படும் அதிக சத்தத்திலான இசை தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபல முதல் பண்ணையில் கியூபா நாட்டை சேர்ந்த அரிய வகை முதலைகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது.
முதலை பண்ணையில் உள்ள முதலைகளை காண சுற்றுலப் பயணிகளும் அதிக எண்ணிக்கையில் வருகை தருவது வழக்கம்.
கடந்த மார்ச் 30ம் தேதி பெண் முதலையுடன் சேர்ந்து மொத்தம் 4 அரிய வகை கியூபா முதலைகள் இறந்து கிடந்துள்ளது. இதற்கான காரணத்தை ஆராய்ந்த முதலை பண்ணை உரிமையாளர், ரோம் விட்டேகர், அருகில் உள்ள 5 நட்சத்திர விடுதியான ஷெராடான் கிராண்ட் சென்னை ரெசார்ட் மற்றும் ஸ்பாவில் அடிக்கடி நடக்கும் இரவு நேர பார்ட்டிகளில், அதிக அளவிலான ஒலிப் பெருக்கிகளுடன் இசை எழுப்பப்படுவதால், அந்த ஒலியின் அதிர்வால், முதலைகள் செத்து மடிந்துள்ளது தெரியவந்துள்ளதாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதலைகளை காப்பாற்ற வேறு இடத்துக்கு மாற்றுவது என்றால் கூட அது பொருளாதாரம் சார்ந்த சிக்கலை உண்டு பண்ணும் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஒலி மாசு குறித்த புகாரையும் கொடுத்துள்ளார்.