மஹாராஷ்டிர மாநிலம் பூனாவுக்கு அருகே உள்ள பாவனா அணையில் அமெரிக்க மீன் ஒன்று பிடிபட்டுள்ளது.
நீர்நிலையிலுள்ள மற்ற மீன்களை கொல்லக்கூடிய ஆபத்தான இந்த மீன், பூனாவுக்கு எப்படி வந்தது என்ற கேள்வி எழும்பியுள்ளது.
கடந்த வாரம், பாவனா அணையில் மீன் பிடித்த உள்ளூர் மீனவர், வித்தியாசமான மீன் ஒன்று கிடைத்துள்ளதாக மீன்வளத்துறைக்கு தகவல் கொடுத்தார். அந்த மீன் 17 செ.மீ. நீளமும் 2.5 கிலோ எடையும் கொண்டிருந்தது. மீன்வளத் துறையினர், அந்த மீன் வட அமெரிக்காவை சேர்ந்தது என்று கண்டுபிடித்தனர்.
அமெரிக்காவிலுள்ள அலிகேட்டர் என்னும் நன்னீர் முதலையை ஒத்த தோற்றம் கொண்டிருப்பதால் இம்மீன் 'அலிகேட்டர் கார்' என்று அழைக்கப்படுகிறது. மிக வேகமாகவும் தந்திரமாகவும் செயல்பட்டு நீர்நிலையிலுள்ள மற்ற மீன்களை பிடித்து உண்ணக்கூடியது.
வெவ்வேறு உப்பு அளவை கொண்ட எல்லா நீர்நிலைகளிலும் வாழக்கூடிய இம்மீன், மற்ற மீன்களை பிடித்து உண்பதால் நம் நாட்டில் நீர்நிலைகளில் நிலவும் உயிரி சமநிலைக்குப் பாதகம் ஏற்படுத்தக்கூடியதாகும். ஆபத்தான இந்த மீனை மீன்காட்சி சாலைக்காக கொண்டு வந்து, பராமரிக்க முடியாமல் அணைக்குள் விட்டிருக்கலாம் என்று கூறியுள்ள மீன்வளம் மற்றும் மேம்பாட்டு துறை அதிகாரி ஜனாக் போசாலே, இதே வகை மீன்களை மீண்டும் அணைக்குள் காண நேர்ந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.