இந்தியாவின் அதிசக்திவாய்ந்த ஜிசாட்-11 செயற்கை கோள் இன்று அதிகாலை 2.07 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
5ஜி போன்ற அதிவேக இணைய சேவைக்காக இஸ்ரோ தயாரித்துள்ள அதிக எடை கொண்ட ஜிசாட்-11 செயற்கை கோள் பிரான்ஸ் நாட்டில் உள்ள கயானாவில் இருந்து ‘ஏரைன்-5’ என்ற ராக்கெட் மூலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.07 மணி முதல் 3.23 மணிக்குள் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.
இன்று காலை செலுத்தப்பட்ட ஏரைன்-5 ராக்கெட்டில் இந்தியாவின் ஜிசாட்-11 செயற்கை கோளுடன் தென் கொரியாவின் ஜியோ-கோம்சாட் 2ஏ செயற்கை கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.
முன்னதாக ஜிசாட்-11 செயற்கை கோளை கடந்த மே மாதம் விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்சி மையமான இஸ்ரோ திட்டமிட்டது. ஆனால், மார்ச் மாதம் ஜிசாட்-6ஏ செயற்கை கோள் செலுத்தப்பட்டதால், ஜிசாட்-11 செயற்கை கோளை ஏவும் பணியை டிசம்பருக்கு இஸ்ரோ ஒத்திவைத்தது.
இந்நிலையில், நேற்று பிரான்ஸில் கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டு, இன்று அதிகாலை விண்ணில் வெற்றிகரமாக ஏரைன்-5 ராக்கெட் உதவியுடன் ஜிசாட்-11 செயற்கை கோள் செலுத்தப்பட்டது.
இந்தியாவிலேயே இதுவரை தயாரிக்கப்பட்ட செயற்கை கோள்களிலேயே இந்த ஜிசாட்-11 செயற்கை கோள் தான் அதிக எடை கொண்டது. அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்துடன் இஸ்ரோ வடிவமைத்துள்ள இந்த செயற்கை கோளின் மொத்த எடை 5854 கிலோ கிராம் ஆகும்.
இதன்மூலம், விரைவில் இந்தியாவிற்கு 5ஜி போன்ற அதிவேக இணைய சேவை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.