இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான கெளதம் கம்பீர் இன்றுடன் தனது 14 ஆண்டு கிரிக்கெட் வாழ்விற்கு குட்பை சொல்கிறார்.
டில்லி மற்றும் ஆந்திரா அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை தொடரில் இன்று கடைசியாக டில்லி அணிக்காக கம்பீர் விளையாடுகிறார்.
தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்புக் கொடுக்காமல் புறக்கணிக்கப்படுவதால், கம்பீர் இந்த முடிவு எடுத்துள்ளார். இதுகுறித்து, தனது பேஸ்புக்கில் 14 நிமிட வீடியோ ஒன்றை கம்பீர் வெளியிட்டுள்ளார். அது நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான கம்பீர் இதுவரை, 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 4,154 ரன்களை குவித்துள்ளார். 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,238 ரன்களையும் 37 டி-20 போட்டிகளில் விளையாடி 932 ரன்களையும் எடுத்து அசத்தியுள்ளார்.
2011ல் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 97 ரன்கள் விளாசி, இந்திய அணி கோப்பையை கைப்பற்ற தூணாக இருந்தவர்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து இருமுறை கோப்பையை வென்று தந்தார். கடந்த 2016ம் ஆண்டு கொல்கத்தா அணியில் இருந்து சொந்த ஊரான டில்லி அணிக்கு இவர் மாறியது. இவரது கிரிக்கெட் வாழ்க்கையில், இவர் எடுத்த மோசமான முடிவாக மாறிப் போனது.
தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்ததாலும், சிறப்பான ஆட்டத்தை வழங்க முடியாதது மற்றும் தோனி, கோஹ்லி போன்ற வீரர்களின் வருகை என பல நிகழ்வுகள் கம்பீருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனதற்கு காரணங்களாக அமைந்தன.
இதனால், தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் விடைப் பெறுவதாக அறிவித்துள்ளார்.