நாங்கதான் ஜெயலலிதாவின் உண்மையான பிள்ளைகள் என்று அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசினார்.
தமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தோ்தலை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் மக்களவை தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் புவனேஸ்வரனுக்கு வாக்கு கேட்டு கோவில்பட்டி, நாலாட்டின் புதூரிலில் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது: தமிழர்களை வஞ்சிக்கும் மத்தியில் உள்ள மோடி ஆட்சி மற்றும் தமிழகத்தில் உள்ள பழனிசாமி அண்ட் கம்பெனி ஆட்சிகளை முடிவுக்கு கொண்டு வர மற்றும், தி.மு.க.தலைமையிலான சந்தர்ப்பவாத கூட்டணியை முறியடிக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆதரிக்க வேண்டும். தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு செல்வாக்கு இல்லாததால் அவை தமிழகத்தை புறக்கணிக்கின்றன.
மோடியின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி பல மாநிலங்கள் அவரிடம் ஏமாந்தன. ஆனால் தமிழக மக்கள் அவரிடம் ஏமாறவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நமக்காக போராடினார். நமது துர்பாக்கியம் நம்மை விட்டு அவர் பிரிந்து விட்டார். இன்றைக்கு அடிமைகளிடம் ஆட்சியை கொடுத்து விட்டோம். அவர்களுக்கு மடியில் கனம் இருப்பதால் மோடியை மண்டியிட்டு வணங்குகிறார்கள். ஆனால் எங்களுக்கு மடியில் எந்த கனமும் இல்லை, அதனால் எந்த பயமும் இல்லை.
நாங்கள்தான் ஜெயலலிதாவின் உண்மையான பிள்ளைகள். தமிழக மக்களுக்கும், தொண்டர்களுக்கும் மட்டும்தான் நாங்கள் தலை வணங்குவோம். மோடி அல்ல அவரது டாடி வந்தாலும் எங்களுக்கு பயமில்லை. ஆட்சி அதிகாரத்தை கண்டு அஞ்சுபவர்கள் அல்ல நாங்கள். ஜெயலலிதாவின் ஆசியோடு கிடைக்கப்பட்ட சின்னம்தான் பரிசுபெட்டகம். போராடி பெற்றுள்ளோம். மக்களுக்காக போராடுவோம். தமிழகத்தின் நலனை மீட்டெடுப்போம்.தமிழர் வாழ்வு மலர நாங்கள் உழைத்திடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.