சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தால் தம்மையும் விசாரிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவரும் எம்.பி.யுமான அன்பு மணி ராமதாஸ் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு விவசாயிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து பல கட்டப் போராட்டங்களை நடத்தினர். பாஜக, அதிமுக தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் இத்திட்டத்தை எதிர்த்தன. தற்போது அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமக இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்ததுடன், விவசாயிகளுடன் சேர்ந்து, அன்புமணி ராமதாசும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.
இந்நிலையில் 8 வழிச்சாலை திட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசுத்தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தால், வழக்கில் தம்மிடமும் விசாரிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு, 8 வழிச்சாலை பிரச்னையில் அதிமுகவும், பாமகவும் வெல்வேறு நிலைப்பாட்டை எடுத்துள்ளது சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதிக்கப் பட்டுள்ள விவசாயிகளை கோபமடையச் செய்துள்ளது. தேர்தலுக்காக கூட்டணியில் உள்ள பாமக, அதிமுக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்ற உத்தரவாதத்தைக் கூடவா பெற முடியாது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரத்து - உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி