சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டத்கக்கான அறிவிப்பாணையை அதிரடியாக ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையிலிருந்து சேலம் செல்ல தூரமும் குறைவு, அதிவேகமாகவும் செல்லலாம் என்று கூறி திடீரென 8 வழிச்சாலைத் திட்டத்தை தமிழக அரசு கடந்தாண்டு மே மாதம் அறிவித்தது. அறிவிப்பாணை வெளியான வேகத்தில் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளையும் தமிழக அரசு முடுக்கிவிட்டது.
இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பெரும் பகுதி விவசாயப் பகுதியாக இருந்ததால் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. விவசாயிகள் பலகட்ட போராட்டங்கள் நடத்தினர். பல்வேறு கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன.
திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ,ரத்து செய்யக் கோரியும் விவசாயிகள் பலரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். பாமக இளைஞரணித் தலைவரும் எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் தரப்பிலும் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்ற து.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்தத் திட்டத்திற்கான அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது என்றும் நிலங்களை கையகப்படுத்தியது செல்லாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது போன்ற விவசாயிகளைப் பாதிக்கும் திட்டங்களை கொண்டு வரும் முன் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
8 வழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால், இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல்வேறு கிராமங்களில் இனிப்புகள் வழங்கி விவசாயிகள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.