தென்காசி தொகுதியில் 25 வயது பூர்த்தியடையாத பெண் சுயேச்சை வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்து வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழகத்தில், மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறும்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம் இதையே கூறுகிறது. இந்நிலையில், தென்காசி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 25 வயது பூர்த்தி அடையாமல் தேர்தலில் போட்டியிடுகிறார். இது தொடர்பான ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தொலைக்காட்சி பெட்டி சின்னத்தில், சுயேச்சையாகப் போட்டியிடும் பொன்னுதாய் என்பவர், தனது வேட்பு மனுவுடன் சமர்பித்துள்ள பிரமாண பத்திரத்தில் தன் வயது 24 எனக் குறிப்பிட்டுள்ளார்.
25 வயது பூர்த்தி அடையாத ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், சின்னத்தையும் தொக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தொகுதியில் பொன்னுத்தாய் என்ற பெயரில் 4 பேர் போட்டியிடுகின்றனர். இந்த சர்ச்சையை அடுத்து ஆட்சியர் அலுவலக அறிவிப்புப் பலகையில் இருந்த 4 பேரின் விண்ணப்பப் படிவங்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது.
இதனையடுத்து, ஃபேஸ் புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேர்தல் ஆணையத்தின் அலட்சிய போக்கை விமர்சித்து நெட்டிசங்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.