சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் இருந்து 13.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லை சேர்ந்த பிரபல ஒப்பந்ததாரர் பெரியசாமியின் பிஎஸ்கே கட்டுமான நிறுவனம் அரசின் கட்டுமானப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையிலுள்ள நிறுவனத்தின் 3 இடங்கள் மற்றும் நாமக்கல்லில் உள்ள 4 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 13.5 கோடி ரூபாய் பணம் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டது. இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணமும் தமிழக அரசியல்வாதி ஒருவருடையது தான் கூறப்படுகிறது. எனினும் முழுவிவரங்கள் வெளிவரவில்லை.