சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவை கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்த மத்திய அரசின் நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு எழுத்துப்பூர்வமான பதிலளித்த மத்திய சட்டத்துறை இணையமைச்சர் பி.பி.சௌத்ரி, தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தை அறிய, அனுப்பப்பட்டதாகவும், இது தொடர்பாக ஆலோசனையில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு, தலைமை நீதிபதி கடிதம் எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 1997 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் இதுபோன்ற தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதையும் சுட்டிக்காட்டி அவர், உச்சநீதிமன்ற முழு அமர்வின் முடிவை ஏற்று, தமிழை வழக்காடு மொழியாக ஏற்பது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என் தெரிவித்துள்ளார்.