பாரதி பெயரில் ஆயிரம் பேருந்துகளை வாங்கிய முதலமைச்சர் - நாஞ்சில் சம்பத் தாக்கு

ஆயிரம் பேருந்துகளை பாரதி என்ற பெயரில் முதலமைச்சர் உட்பட சில முக்கிய அமைச்சர்கள் வாங்கிவிட்டார்கள் என்று டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

Feb 2, 2018, 18:38 PM IST

ஆயிரம் பேருந்துகளை பாரதி என்ற பெயரில் முதலமைச்சர் உட்பட சில முக்கிய அமைச்சர்கள் வாங்கிவிட்டார்கள் என்று டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

இது குறித்து விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், “கழுதை முதுகில் அதிக சுமையை ஏற்றிவிட்டு, கழுதை நடக்க முடியாமல் திண்டாடுகிறபோது, அதன் மேல் இருக்கும் ஒரு துணியை எடுத்துக் கீழே போட்டுவிட்டு, பார்த்தாயா? உன் சுமையை இறக்கிவிட்டேன் என்று கழுதையை ஏமாற்றுவதைப் போல, நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு, இந்தக் கேடுகெட்ட எடப்பாடி அரசு நினைக்கிறது. நாட்டு மக்கள் ஒன்றும் கழுதைகள் அல்ல.

நாட்டு மக்களைப் பிச்சைக்காரர்களோடு ஒப்பிட்டுப் பேசினார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு. இன்றைக்கு 30 கி.மீ. தூரப்பயணத்துக்கு 2 பைசா குறைத்திருக்கிறோம்; 5 பைசா குறைத்திருக்கிறோம் என்று நயா பைசா கணக்கில் 5 சதவீத கட்டணத்தைக் குறைக்கும் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இவர்களுக்கு யார் ஆலோசனை தருகிறார்கள் என்று தெரியவில்லை.

தனியார் பேருந்துகள் லாபத்தில் இயங்கும் போது, அரசுப் பேருந்துகள் மட்டும் ஏன் நஷ்டத்தில் இயங்குகின்றன? முதலமைச்சர் உட்பட சில முக்கிய அமைச்சர்கள், இன்றைக்கு ஆயிரம் பேருந்துகளை அதே பெயரில் வாங்கிவிட்டார்கள். பாரதி என்ற பெயரில் வாங்கிவிட்டார்கள். அதே பெயரில் அந்தப் பேருந்துகள் ஓடும்.

எச்.ராஜாவால் வைரமுத்துவின் உயரத்தை எட்டிப்பிடிக்க முடியுமா? நாவடக்கம் இல்லாமல் பேசுகிறார். ஏற்கனவே, வைரமுத்துவை ஆண்டாள் மன்னித்துவிட்டார். ஆண்டாளை அறியாத சண்டாளர்கள், தமிழ்நாட்டில் எப்படியாவது ஒரு கலகத்தை மூட்டி, கால் ஊன்றுவதற்கு போடும் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த நாடகம். ஆன்மிக அரசியல் என்பது காவி அரசியலின் இன்னொரு முகம்.” என்று கூறியுள்ளார்.

You'r reading பாரதி பெயரில் ஆயிரம் பேருந்துகளை வாங்கிய முதலமைச்சர் - நாஞ்சில் சம்பத் தாக்கு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை