தேர்தலுக்குப் பின்பு தி.மு.க. ஆட்சிதான்! ஸ்டாலின் இறுதிக்கட்டப் பிரச்சாரம்!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் இன்று(ஏப்.16) மாலையுடன் முடிவடைகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை திருவாரூரில் மேற்கொண்டார். கொறாடச்சேரியில் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது:

நான் கட்சியில் கீழ்மட்டப் பொறுப்பில் இருந்து படிப்படியாக முன்னேறி தலைவர் பதவிக்கு வந்துள்ளேன். உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர், 2 முறை சென்னை மேயர் என்று 1989ம் ஆண்டு முதல் மக்கள் பிரதிநிதியாக பணியாற்றியிருக்கிறேன்.
உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் பதவியில் இருந்த போது ஒவ்வொரு ஊருக்கும் சென்று மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நானே நேரடியாக சுழல்நிதியை வழங்கியிருக்கிறேன். ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம், ஒகேனக்கல் குடிநீர் திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் என்று நான் பதவியில் இருந்த போது ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறேன்.

இப்போது நான் எதிர்க்கட்சித் தலைவர். அந்தப் பணியையும் நான் ஒழுங்காக செய்து வருகிறேன். காவிரிப் பிரச்னை உள்பட மக்கள் பிரச்னைக்காக ஆர்ப்பாட்டம், மறியல் என்று போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. உடனடியாக அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். அரியலூரில் தாழ்த்தப்பட்ட மாணவி அனிதா நிறைய மதிப்பெண் எடுத்தும், நீட் தேர்வால் வாய்ப்பு இழந்து தற்கொலை செய்து கொண்டாள். அன்றிரவே அங்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, கட்சி சார்பில் நிதியும் அளித்து வந்தேன். கஜா புயல் வந்த போது, இந்த பகுதிக்கு உடனடியாக வந்து மக்களுக்கு ஆறுதல் அளித்து உதவினேன்.

இப்படி ஆட்சியில் இருந்த போதும் சரி, எதிர்க்கட்சியாக இருந்த போதும் சரி, நான் மக்களுக்காக வந்திருக்கிறேன். ஆனால், கஜா புயல் வந்த போது முதலமைச்சர் எடப்பாடி ஒரு வாரம் கழித்துதான் வந்தார். அதுவும் டக, டக, டகவென ஹெலிகாப்டரில் வந்து பார்த்து விட்டு சென்றார். பிரதமர் மோடியோ வராவிட்டாலும் ஒரு ஆறுதல் வார்த்தையாவது சொல்லியிருக்கலாம். ஆனால், ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. ஜாடிக்கேத்த மூடி, மூடிக்கேத்த ஜாடி என்று சொல்வார்களே, அப்படித்தான் இவர்களும். எடப்பாடிக்கேத்த மோடி, மோடிக்கேத்த எடப்பாடி.

இந்த தேர்தலில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிமாற்றம் வருவது உறுதி. மக்களவை தேர்தலில் 39 தொகுதியிலும் வெற்றி பெறுவோம். மத்தியில் ராகுல் தலைமையில் கூட்டணி ஆட்சி வரும். அதே போல், 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. எனவே, 119 எம்.எல்.ஏ.க்களுடன் பெரும்பான்மையான ஆட்சியாக தி.மு.க. ஆட்சி அமையும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

Tamil news, Latest Tamil News, Tamil News Online, Tamil Nadu Politics, Crime News, Tamil Cinema, Tamil Movies, Movie review, Sports News