எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது? எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில், வருமான வரி துறையினர் அதிரடி சோதனையில் இறங்கி உள்ளனர். தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் நேற்று இரவு 8 மணி அளவில் 10 பேர் கொண்ட வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அதேபோல், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க அலுவலகத்தில் சோதனை நடத்தியதில் ரூ.1 கோடியே 48 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வருமான வரி துறையினரின் இந்த நடவடிக்கையால் தமிழக தேர்தல் களம் உச்சக் கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில், ‘திருமதி கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை, எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி, அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது? 2019 தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் எதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே’ எனப் பதிவிட்டுள்ளார்.
திமுக, காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வருமான வரி துறையினரின் நடவடிக்கை அராஜகமானது எனக் குற்றம்சாட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.