வேலூரில் ஓட்டுக்கு ரூ.500 கொடுக்க அதிமுக முன்னாள் எம்எல்ஏ சம்பத் அறிவுரை கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.
தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல்கள் கிடைத்ததின் அடிப்படையில் தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கையில் கடந்த மாதம் 27-ந் தேதி இரவு வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள துரைமுருகன் இல்லம், அவரது மகன் கதிர் ஆனந்த் நடத்தும் என்ஜினீயரிங் கல்லூரி, பள்ளிக்கூடத்தில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து துரை முருகனுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் இல்லங்களில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்து, மறுபடியும் வருமான வரி அதிகாரிகள் கடந்த 1-ந் தேதி சோதனைகள் நடத்தினர்.
அந்த சோதனைகளில் கட்டு கட்டாக ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகை சிக்கியதாக தகவல்கள் வெளியாகின. இதனால் தேர்தல் ஆணையம் நேற்று வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்தது. வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக, திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வேலூர் தொகுதியில் அதிமுக பணப்பட்டுவாடா செய்தததற்கான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா செய்வது குறித்து கூட்டணி கட்சியினருடன் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கோவி.சம்பத்குமார் உரையாடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ஓட்டுக்கு 500 கொடுக்குமாறு தொண்டர்கள் அறிவுறுத்துவதும், ஏ.சி.சண்முகத்துக்கு வாக்களிக்கும் மக்களுக்கு பணம் ஒழுங்காக சென்று சேர வேண்டும் எனவும், காவலர்கள் யாரும் வருகிறார்களோ பார்ப்பதற்கு இரண்டு மூன்று பேர் நிற்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை சம்பத்குமார் கூட்டணி கட்சிகளுக்கு சொல்லும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.