புதிய அரசியல் கட்சியாக உருவெடுக்கும் அ.ம.மு.க.! பொதுச் செயலாளராகிறார் டி.டி.வி!!

AMMK is planning to register as a political party in Election commission

Apr 19, 2019, 13:37 PM IST

டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற இயக்கம் ஒரு புதிய அரசியல் கட்சியாக உருவெடுக்கிறது.


முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க.வில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. அ.தி.மு.க. பொதுக்குழு கூடி, தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்தது. அதன்பின்பு, முதல்வராக பொறுப்பேற்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டு, சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இது குறித்த கடிதம், அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவுக்கு அனுப்பப்பட்டது.


ஆனால், அவர் கோவையில் இருந்து சென்னைக்கு வராமல் மும்பைக்கு சென்று விட்டார். அவர் சென்னை வராததால், சசிகலாவை முதல்வராக பொறுப்பேற்க அழைக்கவும் இல்லை. இதற்கிடையே, சசிகலா குடும்பத்தினர் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக குற்றம்சாட்டிய ஓ.பி.எஸ் திடீரென ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று தியானம் மேற்கொண்டார். பின்னர், சசிகலா குடும்பத்திடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்க தர்மயுத்தம் தொடங்கினார். ஆனால், அதற்குள் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சொகுசு பஸ்களில் ஏற்றி கூவத்தூருக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வந்தது.


இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். கவர்னர் அவரை அழைத்து பதவியேற்க வைத்தார். இதற்கிடையே, அ.தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரனை நியமித்து விட்டு பெங்களூரு சிறைக்கு சென்றார் சசிகலா. இதன்பின், ஆர்.கே.சட்டமன்ற இடைத்தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் டி.டி.வி. தினகரன் போட்டியிட்டார். ஆனால், தாங்களே உண்மையான அ.தி.மு.க. என்று ஓ.பி.எஸ் தரப்பு கோரியதால், இரட்டை இலை முடக்கப்பட்டது. அதனால், தினகரனுக்கு தொப்பி சின்னம் அளிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் நடப்பதற்கு முன்பு வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சில ஆவணங்களையும் கைப்பற்றினர். அதில் பணபட்டுவாடா தகவல்கள் இருந்ததால் ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.


இதன்பின், இரட்டை இலையை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரனை டெல்லி போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. அதன்பின், எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்த்தனர். சசிகலா குடும்பத்தினருக்கும், அ.தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி, தினகரனையும் நீக்கினர்.


ஆனாலும், அ.தி.மு.க.வின் தொண்டர்கள் தங்கள் பக்கமே உள்ளதாக கூறி, கட்சிக்கும், சின்னத்துக்கும் தினகரன் உரிமை கொண்டாடி வந்தார். தேர்தல் கமிஷன் இதை ஏற்கவில்லை. எடப்பாடி-ஓ.பி.எஸ். அணிக்கு கட்சிப் பெயரையும், சின்னத்தையும் அளித்தது. இது தொடர்பான அப்பீல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, தேர்தல் வந்ததால் இடைக்காலமாக தாங்கள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு இயக்கமாக செயல்பட்டு வருவதாக தினகரன் அறிவித்தார். ஆனாலும், அதை தேர்தல் கமிஷனில் கட்சியாக பதிவு செய்யவில்லை. இதனால் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பொது சின்னம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது, அ.ம.மு.க.வை கட்சியாக தேர்தல் கமிஷனில் பதிவு செய்யத் தயாராக இருப்பதாக தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில்தான், அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய தினகரன் முடிவு செய்திருக்கிறார். இதன்மூலம், அ.தி.மு.க.வே இனி தங்களுக்கு தேவையில்லை என்றும், அந்த கட்சியில் இருந்து வெளியேறுபவர்கள் தனது தலைமையை ஏற்று வருவார்கள் என்று அவர் நம்புகிறார். மேலும், தானே துவங்கிய கட்சி என்பதால், சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த எவரும் இதில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் செய்யலாம் என தினகரன் கருதுகிறார்.


அதனால்தான், இந்த கட்சியில் சசிகலாவைப் பற்றியே குறிப்பிடாமல் தன்னை பொதுச் செயலாளராக அவர் அறிவிக்கப் போகிறாராம். மே 23ம் தேதி வெளியாகும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளில் அ.ம.மு.க. வெற்றி பெறாவிட்டாலும் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை எட்டினாலே கட்சியின் மதிப்பு கூடி விடும். அதைத் தொடர்ந்து கட்சியை மேலும் பலப்படுத்தி, அ.தி.மு.க, தி.மு.க. கட்சிகளுக்கு வலுவான போட்டியாக உருவெடுக்கலாம் என தினகரன் கருதுகிறார். இது எந்த அளவுக்கு அவருக்கு கை கொடுக்கும் என்பது போகப் போக தெரியும்.

கமல் வாக்களிக்க இருந்த பூத்தில் கரண்ட் கட் - ஓபிஎஸ் வாக்குச்சாவடியில் ஓட்டு மிஷினில் கோளாறு

You'r reading புதிய அரசியல் கட்சியாக உருவெடுக்கும் அ.ம.மு.க.! பொதுச் செயலாளராகிறார் டி.டி.வி!! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை