மதுரை ஆட்சியர், தேர்தல் அதிகாரிகளை மாத்துங்க - தேர்தல் ஆணையத்துக்கு திமுக கூட்டணி தலைவர்கள் கோரிக்கை

Transfer Madurai election officials, Dmk alliance urges election commission over vote counting centre complaint

Apr 21, 2019, 13:10 PM IST

மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்த அத்துமீறல்கள் தொடர்பாக பல்வேறு சர்தேகங்களை எழுப்பியுள்ள திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் , மதுரை மாவட்ட ஆட்சியரையும், தேர்தல் அதிகாரிகளை உடனே மாறுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சம்பூர்ணம் என்கிற வட்டாட்சியர் அந்த வளாகத்திற்குள் நுழைந்து ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் மூன்று மணி நேரமாக இருந்திருக்கிறார். அவரோடு வேறு மூன்று நபர்களும் இருந்திருக்கிறார்கள். இவர்களிடம் அடையாள அட்டையும் இல்லை. காவல்துறை அவர்களை மூன்று மணி நேரத்திற்கு பின்பே கண்டுபிடித்து தடுத்து வைத்திருக்கிறது.மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக அதிகாரிகள் தலையிட்டு அழைத்துச் சென்றுள்ளனர்.


மாவட்ட ஆட்சித் தலைவரை தொடர்பு கொள்ள முயற்சித்து முடியாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசன் நீண்ட நேரம் போராடிய பிறகும், வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வரவில்லை. பின்னிரவு 12.30 மணிக்கு பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்த போது, வேட்பாளர் இந்த விசயம் குறித்து தெரிவித்த பிறகு தான் தனக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார். இது நம்பத்தகுந்ததாக இல்லை.


இந்நிலையில் தபால் வாக்குகளில் முறைகேடுகள் செய்வதற்கான முயற்சியாகவே இந்த சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.எனவே,
ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட அறையை முத்திரையிட வேண்டாம் என உத்தரவிட்டது யார்?.
சட்டவிரோதமாக ஆவண அறைக்குள் புகுந்த அலுவலருக்கும், அவருடன் சென்றவர்களுக்கும், அறையை திறப்பதற்கும் ஆவணங்களை எடுப்பதற்கும் உத்தரவிட்டவர்கள் யார்?. யாரும் அவருக்கு உத்தரவிடவில்லையெனில் சம்பந்தப்பட்ட அலுவலர் யாருக்கும் தெரியாமல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதன் உள்நோக்கம் என்ன?.
மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி ஒருவர் பாதுகாக்கப்பட்ட அறைக்குள் செல்வதும், அதை மூன்று மணி நேரம் வரை காவல்துறையினர் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதும் எப்படி? ஆகிய கேள்விகள் முக்கியமானவை.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்பில்லை. இவ்வளவு மோசமான சம்பவம் நடந்த பிறகும், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மதுரையிலேயே இருந்த போதும், சம்பவ இடத்திற்கு வராததும், சில மணி நேரங்களுக்கு பின்பு வேட்பாளர் சு. வெங்கடேசன் சொன்ன பிறகு தான் இந்த பிரச்சனையே தனக்கு தெரியும் என்று சொன்னதும் ஆச்சரியமளிக்கிறது.

எனவே,
நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து முழுமையான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியை மாற்றி வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும். மேலும் அனைத்து தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு முழுமையான துணை ராணுவ பாதுகாப்பு ஏற்பாடு செய்திட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெற மிகவும் அத்தியாவசியமானதாகும். எனவே, தாங்கள் இந்த கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என கடிதத்தில் கூறியுள்ளனர்.

4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்:மே 1ம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் ஸ்டாலின்!

You'r reading மதுரை ஆட்சியர், தேர்தல் அதிகாரிகளை மாத்துங்க - தேர்தல் ஆணையத்துக்கு திமுக கூட்டணி தலைவர்கள் கோரிக்கை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை