4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தை வரும் மே 1-ம் தேதி ஓட்டப்பிடாரத்தில் இருந்து தொடங்குகிறார் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 4 தொகுதிக்கான தி.மு.க வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இடைத்தேர்தல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் 4 தொகுதியில் இடைத்தேர்தல் குறித்து திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துரைமுருகன், கனிமொழி, ஆர்.எஸ். பாரதி, ஐ.பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை வரும் மே 1ம் தேதி ஓட்டப்பிடாரத்தில் தொடங்குகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். மே 1-ம் தேதி பிரசாரத்தைத் தொடங்கும் ஸ்டாலின் மே 8ம் தேதி அரவக்குறிச்சியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். மே 3, 4 ஆகிய தேதிகளில் திருப்பரங்குன்றம் தி.மு.க வேட்பாளர் சரவணனை ஆதரித்தும், மே 5, 6 ஆகிய தேதிகளில் சூலூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்தும் மு.க ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். பிறகு, மே 7, 8 அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார் மு.க ஸ்டாலின்.