‘’தோல்வியின் விளிம்பில் நிற்பவர்கள் அப்பாவி மக்களின் உயிர்களைப் பணயம் வைத்து அரசியல் லாபம் தேடுகின்றனர்’’ என்று சிதம்பரம் தொகுதியில் ஏற்பட்ட கலவரத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்.
மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். நேற்றைய வாக்குப்பதிவின் போது, சிதம்பரம் தொகுதியில் உள்ள அரியலூர் பொன்பரப்பி கிராமத்தில், வேறொரு கட்சியைச் சேர்ந்தவர்கள் பானையைத் தெருவில் போட்டு உடைத்து மோதலில் ஈடுபட்டனர். இதனால், இருதரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்பட்டது.
இதற்கு, காவல்துறை அலட்சியத்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டு, இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் இனம்புரியாத பீதி ஏற்பட்டுள்ளது. காவல்துறை யாருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறது? நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் சுயநல தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்! எனக் ட்விட்டர் பதிவின் வாயிலாகக் கேட்டுக் கொண்டுள்ளார் ஸ்டாலின்.