நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 18ம் தேதி அன்று மக்களைவத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதில், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள் என அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். அதன் வகையில், நடிகர் சிவகார்த்திகேயனும் தனது வாக்கைப்பதிவு செய்ய தன் மனைவியுடன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வாக்குச்சாவடிக்குச் சென்றார். அங்கு உள்ள வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் இல்லை. இதனையடுத்து, அதிகாரிகளுடன் பேசிய சிவகார்த்திகேயன், பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு வாக்களிக்க அதிகாரிகள் அனுமதி வழங்கினர். அதன் பின்னர், சிவகார்த்திகேயன் தன் ட்விட்டரில், ‘வாக்களிப்பது நமது உரிமை அதற்காகப் போராடுங்கள்’ என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ‘நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்தில் வாக்குச்சாவடியில் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்தது சட்டப் படி குற்றம். நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.