சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று, தமிழ்நாட்டின் குடிமகன்களுக்கு அதிர்ச்சி தரும் முடிவை பரிசாக செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபான கடைகளை அரசே நடத்தி வருகிறது. கடந்த 2016ம் ஆண்டில் 7 ஆயிரத்து 100 மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. பல்வேறு தரப்பில் மதுபான கடைகளுக்கு எதிர்ப்புகள் வலுவடைந்ததை அடுத்து, கடந்த சட்டமன்ற தேர்தலில், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என பிரசாரத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சிகளுமே இதை முன்னிருத்தி வாக்குறுதி அளித்தன.
மேலும், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வர் ஆனதும் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இதுவரை 3,320 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுக்கடைகளின் எண்ணிக்கை 2,830 ஆக குறைந்தது. பின்னர், மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால், தற்போது 5 ஆயிரம் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, விற்பனை குறைந்த மதுக்கடைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் பிப்ரவரி 24ம் தேதி அன்று 500 மதுக்கடைகள் மூடப்படுவத அரசு தெரிவித்துள்ளது.
இது வரவேற்க்கக்கூடியது என்றாலும்.. “குடி”மகன்களுக்கு அதிர்ச்சித் தரும் விஷயம் தானே..