வந்துவிட்டது தண்ணீர் பஞ்சம்...! நம் கண் எதிரே கதிகலங்கி நிற்கிறது... கேப்டவுன்

by Isaivaani, Feb 5, 2018, 08:29 AM IST
தண்ணீர் பஞ்சம்... உலக நாடுகள் பலவற்றை  அச்சுறுத்தும் நரகாசுரன், நீண்டநாள் தூக்கத்திலிருந்து எழுந்து தனது ஆட்டத்தை ஆடத் தொடங்கிவிட்டான்...
தென் ஆப்பிரிக்காவின் சட்டமன்ற தலைநகரமும், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமுமான கேப்டவுனில் ரேசன் முறையில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? ஆம், வரும் ஏப்ரல் மாதம் தண்ணீரே இல்லாத வறண்ட பூமியாகப் போகிறது கேப்டவுன். உலகிலேயே தண்ணீரே இல்லாத மிகப் பெரிய நகரம் என்ற அவலத்தை சுமக்கப் போகிறது அந்த நகரம்.
சுமார் 40 லட்சம் பேர் வசிக்கும் கேப்டவுனில் கடந்த மூன்று ஆண்டுகளாக, ஒரு சொட்டு மழைத்துளி கூட விழவில்லை. இதனால் பெரும்பாலான நீர் நிலையங்கள் வற்றி விட்டன. 
கேப்டவுனுக்கு உயிர் ஆதாரமாக இருந்த தீவாட்டர்ஸ்க்லூஃப் (Theewaterskloof) அணை, கொள்ளளவில் கடந்த 2016ம் ஆண்டு 13 சதவீதமாக இருந்தது. ஆனால், இப்போது நீர் 10%க்கும் குறைவான நிலையில் வறட்சியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. நகருக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருக்கும் இன்னும் சில அணைகளும் 15% வந்துவிட்டன. அது 13.5% எனும் நிலையை எட்டும்போது, “டே ஜீரோ” நிகழும்.
'டே ஜீரோ’.. என்றால் என்னவென்று யோசிக்கின்றீர்களா? உலகிலேயே முதன்முறையாக ஒரு பெரு நகரம் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல், முற்றிலுமாக தண்ணீரில்லா நிலைக்குப் போகப்போகிறது. இதைத்தான் ஆங்கிலத்தில் “டே ஜீரோ” (Day Zero) என்று சொல்கிறார்கள்.
கேப்டவுன் நகர அதிகாரிகள் "வரும் ஏப்ரல் 22-ம் தேதி கேப்டவுனில் நீர் முற்றிலும் தீர்ந்துபோகும்" என்று அறிவித்தனர். ஆனால் இப்போது நீரின் பயன்பாட்டை கணக்கிட்டு, ஏப்ரல் 12-ம் தேதியுடன் நீர் தீர்ந்துவிடும் என அறிவித்துள்ளனர். அதன்படி, வருகிற ஏப்ரல் 12-ம் தேதி கேப்டவுன் நகரம் "டே ஜீரோ" நாளை எட்டுகிறது.
டே ஜீரோவுக்குப் பிறகு...
டே ஜீரோ நிலை ஏற்பட்ட நாளிலிருந்து, நகரின் எந்தக் குழாய்களிலும் தண்ணீர் வராது. அதனால், நகர் முழுக்க 200க்கும் அதிகமான “தண்ணீர் பெறும் மையங்களை” அமைத்திருக்கிறது அரசு. வெளியிலிருந்து தண்ணீரை வாங்கி வந்து அதில் நிரப்புவார்கள். வரிசையில் நின்று பெற்றுக் கொள்ள வேண்டும், அன்றைய நிலவரப்படி ஒரு நாளைக்கு ஒருவருக்கு 25 லிட்டர் மட்டுமே வழங்கப்படும். அதுவும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே.
இனிவரும் மாதங்களில் தண்ணீர் பஞ்சம் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தண்ணீரை பயன்படுத்துவதற்காக பல கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம், ஒரு நாளைக்கு ஒருவர் 87 லிட்டர் தண்ணீரை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று சட்டம் போடப்பட்டது. மீறினால், அபராதத் தொகையோடு தண்டனை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டே மாதத்தில், அதாவது கடந்த வாரத்திலிருந்து, ஒரு நாளைக்கு ஒருவருக்கு 50 லிட்டர் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என உத்தரவிட்டு செயல்படுத்தி வருகிறது. அதிகமாக செலவழிக்கும் ஒவ்வொரு லிட்டர் தண்ணீருக்கும் இந்திய மதிப்பில் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 ரூபாய் வறட்சிக் கட்டணமும் வசூலிக்கிறது கேப்டவுன் நிர்வாகம்.
மழை மீண்டும் கேப்டவுனில் பெய்யும்வரை, வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கேப்டவுனில் கார் சுத்தம் செய்தல் மற்றும் நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் விடுதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதோடு, மாநகர குடிநீர் வாரியம் கொடுக்கும் தண்ணீரை, வீட்டுத் தோட்டம் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மைதான புல்தரைகளை பராமரிக்க அதிக அளவு தண்ணீர் தேவை என்பதால், கிளப் மற்றும் பள்ளிகளுக்கு இடையில் நடக்க இருந்த பல கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதை தென்னாப்பிரிக்காவின் மேற்கு மாகாண கிரிக்கெட் சங்கமும் உறுதி செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஒருமாத காலமாக தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் போட்டியே தண்ணீர் பஞ்ச நகரமான கேப்டவுன் என்பதால் தண்ணீர் சிக்கன நடவடிக்கையில் இந்திய வீரர்களுக்கு கூட அந்நாட்டு அரசு எந்த விதிவிலக்கும் அளிக்கவில்லை. இந்திய வீரர்கள் இரண்டு நிமிடத்துக்கு மேல் குளிக்க கூடாது என விநோத கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. முதல் டெஸ்ட் போட்டியின் போது பெய்த மழையால் கொஞ்சம் தண்ணீர் கிடைத்துள்ளது. தற்போது அந்த தண்ணீரும் குறைந்து வருகிறது.
‘இன்னும் சில வருடங்களில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்... தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்... இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்றெல்லாம், சமூகவளைதளங்களில் அவ்வப்போது பரவும் சில தகவல்களை நாம் பார்த்திருப்போம்.
ஆனால் இப்போது முதன் முறையாக, அதுபோன்ற ஒரு நாள், நம் கண் முன்னே மிக அருகில் வந்து கொண்டிருக்கிறது... அதுவும், சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் போகும் நாள் துல்லியமாக அறிவிக்கப்பட்டு, அதை கவலையுடன் எதிர்நோக்கியுள்ளனர் கேப்டவுன் மக்கள்.
ஒரு காலத்தில் உலகின் பசுமையான நகரில் ஒன்றாக கேப்டவுன் நகரம் விளங்கியது. ஆனால், உலக வெப்பமயமாதல், மழை பெய்யாமை, அரசின் மெத்தன போக்கு, அதைவிட மக்களின் அலட்சியம் ஆகிய காரணங்கள் ஒன்று சேர, இன்று ஒரு சொட்டுத் தண்ணீருக்காக கையேந்த உள்ளது கேப்டவுன் நகரம். கடந்த 2007ம் ஆண்டே, தென்னாப்பிரிக்க நீர் விவகாரங்கள் துறை, நிலத்தடி நீர் குறைந்து வருவது குறித்து எச்சரிக்கை விடுத்தது. இதுகுறித்து மக்களிடமும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மக்கள் இதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.  அதேசமயம், தக்க நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்கவில்லை என்று அரசாங்கத்தின் மீதும் புகார்கள் எழுகின்றன.
கேப்டவுனில் பஞ்சம் தீரவில்லை என்றால் மக்களிடையே நீருக்காக சண்டைகள் ஏற்படும். பணம், காரை திருடும் முறை மாறி, தண்ணீரை திருடும் சூழல் உருவாகும். அப்போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டு காவல்துறை, ராணுவம் கொண்டு அரசு மக்களை ஒடுக்கும். இதனால் கலவரங்கள் உருவாகும். ஒரு நகரத்திற்குள் ஏற்படும் நீர் வறட்சிப் போர், மற்ற நாடுகளிடையேயான போராகவும் கூட மாறலாம்.
நாம் இந்த செய்தியை வெறும் உலகச்செய்தியாக நினைத்து கடந்து போகப் போகிறோமா? நமக்குத்தான் குடிக்க தண்ணீர் எளிதாக கிடைக்கிறதே என்று அலட்சியமாக கடந்து செல்லப் போகிறோமா.? நைஜீரியா, சோமாலியா, சிரியா போன்ற பல்வேறு நாடுகள் கேப்டவுனின் முக்கால்வாசி நிலையை தாண்டிவிட்டது... ஈரானும் இஸ்ரேலும் அரை கிணறு தாண்டி விட்டது. விரைவில் இந்தியாவின் முன்னோடி மாநிலம், வளர்ச்சி மாநிலம் என பாராளுமன்ற தேர்தலில் விளம்பரப்படுத்தப்பட்ட குஜராத் மாநிலத்தையும் காவு வாங்க தயாராகி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆய்வுகள் உண்மையானால் அடுத்து... வேற யாரு... நம்ம தான்...!!!
இப்போதே நாம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை என்றால்... கேப்டவுனின் நிலையை நாமும் சந்திக்கப்போகும் நாள், வெகு தொலைவில் இல்லை.

You'r reading வந்துவிட்டது தண்ணீர் பஞ்சம்...! நம் கண் எதிரே கதிகலங்கி நிற்கிறது... கேப்டவுன் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை