முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் சொத்துகளை அமலாக்கத்துறை முடிக்கியுள்ளது.
மதுரை கீழவளவில், சட்டத்துக்கு எதிராக, வரம்பு மீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்தாக மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மற்றும் அவரின் நண்பர்கள் மீது புகார்கள் எழுந்தன. இந்த புகாரை அடுத்து, தயாநிதிக்கு எதிரான ஆவணங்களை திரட்டும் பணியில் அமலாக்கத்துறை இறங்கியது. அதோடு, கிரானைட் சுரங்க முறைகேட்டால் சுமார் 257 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
அதன்படி, கடந்த 2012ம் ஆண்டில் துரை தயாநிதி மற்றும் முறைகேட்டில் தொடர்புடைய 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தது, விசாரணை நடந்து வந்தது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இவ்வழக்கில் துரை தயாநிதிக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய அமலாக்கத்துறை, அவருக்குச் சொந்தமான ரூ.40 கோடி சொத்துகளை இன்று முடக்கியது. அவருக்கு சொந்தமான மதுரை மற்றும் சென்னையிலுள்ள 25 அசையும், அசையா சொத்துகள் மற்றும் வைப்புநிதி உள்ளிட்ட சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், துரை தயாநிதி மீது அமலாக்கத்துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கை முக்கியத்தும் பெற்றது மட்டுமல்லாமல், பல்வேறு கோணங்களில் சிந்திக்கவும் வைத்துள்ளது.