‘தளபதி 63’ படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஊழியரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் நடிகர் விஜய்.
இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படம் ‘தளபதி 63’. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பானது சென்னை, ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு படப்பிடிப்பின் போது மிகவும் உயரமாக வைக்கப்பட்டிருந்த ஃபோகஸ் லைட் ஒன்று எலக்ட்ரீஷியன் செல்வராஜ் என்பவர் தலையின் மீது விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதோடு, அவரின் மருத்துவச் செலவிற்காகப் பண உதவியை விஜய் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. மருத்துவமனைக்கு விஜய் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.
#ThalapathyVijay just visited #Ramachandra Hospital to see a person who met with an accident during #Thalapathy63 shooting! pic.twitter.com/jT2Pisd1ym
— yuvraaj (@proyuvraaj) April 24, 2019
விஜய் நடிப்பில் உருவாகும் 63-வது படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.