4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அமமுக வேட்பாளர்கள் பொது சின்னமான பரிசுப்பெட்டி சின்னதில் போட்டியிட்டனர். அதேபோல், நடைபெறவுள்ள 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அண்மையில் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்திடம் இருந்து சின்னம் ஒதுக்குவது தொடர்பாக எவ்வித பதிலும் வரவில்லை. இதனால், அமமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் வழங்கக் கோரி கடந்த 23 தேதியன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் டிடிவி தினகரன். இந்நிலையில், அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் இன்று ஒதுக்கியது.
தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியதை அடுத்து அமமுகவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அதோடு, இடைத்தேர்தல் பணிகளை விறுவிறுப்பாகத் தொடங்கவும் முடிவுசெய்துள்ளனர்.