ஆசிய தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் ரோபா சங்கர், ரூ.1 லட்சம் பரிசு அறிவித்துள்ளார்.
கத்தார் தலைநகர் தோகாவில் 23 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், 800 மீட்டர் ஓட்டபந்தையத்தில் கலந்து கொண்ட தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து முதல் இடம் பிடித்து, இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்தார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கோமதி, சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கலந்து கொண்டு, தங்கப்பதக்கத்தை வென்றிருப்பதால் தமிழக மக்கள் பெருமை கொண்டுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், ஜி.கே வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சாதனை படைத்த கோமதி மாரிமுத்துவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இருப்பினும், தமிழக அரசு சார்பில் எந்த ஒரு பரிசும் இதுவரை அவருக்கு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தந்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு, நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், ரூ.1 லட்சம் பரிசு அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ‘ஆசிய தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு எனது வாழ்த்துக்கள். தந்தை இறந்த நிலையிலும், மனந்தளராது விடாமுயற்சியுடன் விஸ்வரூப வெற்றி பெற்ற அன்பு சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். கஷ்டத்தின் வலி என்ன என்பது எனக்குத் தெரியும். யாருடைய உதவியும் இல்லாமல், தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேறியவன். உங்களின் இந்த சாதனைக்குச் சின்ன அன்பு பரிசாரக இதனை ஏற்றுக்கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளார்.