காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் கஞ்சா செடி வளர்ப்பது குறித்த தகவல் பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்த கோயிலுக்கு சென்று யாகம் செய்தாலோ அல்லது எள்விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டாலோ வழக்குகளில் இருந்து விடுபட முடியும் என்று சிலர் மூட நம்பிக்கையில் உள்ளனர். இதனால் வடஇந்திய, தமிழக அரசியல் பிரமுகர்களும், திரையுலக பிரமுகர்களும் வந்து யாகங்களும் சிறப்பு பூஜைகளும் செய்து வருவதால் இக்கோயில் மேலும் பிரசித்திபெற்றது.
இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த நிலையில் கோவில் வளாகத்தில் கஞ்சா செடி வளர்கப்பட்டு வருவதாக விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆய்வாளர் சரவணன் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு தகவல் அளித்தார். அவர்கள் ஞாயிறன்று (பிப். 4) மாலை கோயிலுக்கு சென்று அதிரடி ஆய்வு செய்தனர்.
அப்போது கோயில் வளாகத்தில் அமைந்துள்ள குளக்கரையில் உடைக்கப்பட்ட பிளாஸ்டிக் குடத்தில் மண்ணை நிரப்பி அதில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணையில் கோயிலை ஒட்டி அமைந்துள்ள துணிக்கடையில் காவலாளியாக வேலை பார்த்து வரும் சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் கஞ்சா செடி வளர்த்தி வந்தது தெரிந்தது.
அவரை காவல்துறையினர் கைது செய்தனர். வேறு எங்காவது வளர்த்தால் மாட்டி கொள்வோம் என்று பயந்து கோயிலுக்குள் கஞ்சா செடி வளர்த்து பயன்படுத்தியதாக மூர்த்தி கூறி உள்ளார்.