சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி சட்டப்பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க கோரி அண்மையில் அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். அவர்களை, தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படியில், இன்று மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கும் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். ஏழு ராட்களுக்குள் புகார் மீதான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு, ‘’டிடிவி தினகரனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது கட்சி விரோத நடவடிக்கை என்றால் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டவர்கள் சசிகலாவுடனும், தினகரனோடும் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் தானே? இது தவறு இல்லையா? மேலும், நோட்டீஸ் கையில் கிடைத்தவுடன் அடுத்த நடவடிக்கை எடுப்போம்’’ என்று எம்.எல்.ஏ-க்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
22 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்று, அதன் முடிவுகள் மே 23-ம் தேதி வரவுள்ள நிலையில், எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காகவே, அதிமுக எடுத்து வரும் சூழ்ச்சி நடவடிக்கை என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக, சபாநாயகர் தன்பால் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி சட்டப்பேரவை செயலாளரிடம் மனு அளித்துள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ், சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரிய திமுக உள்ளிட்டவற்றால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.