ஸ்டாலின் vs சபாநாயகர்! சபாஷ், சரியான போட்டி...

Tamilnadu politics again get momentum as speaker and stalins sudden movements

by எஸ். எம். கணபதி, Apr 30, 2019, 22:15 PM IST

தேர்தலில் வெல்லப் போவது யார் என்று அறிந்து கொள்ள மே 23ம் தேதி வரை காத்திருக்காமல், அதற்கு முன்பாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஆடு புலி ஆட்டத்தை துவங்கியுள்ளன. இந்த ஆட்டத்தால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மேலும், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போது இந்த 22 தொகுதிகளை கழித்து விட்டு பார்த்தால் சட்டசபையில் உள்ள மீதி உறுப்பினர்கள் எண்ணிக்கை 212. இதில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 97, டி.டி.வி.தினகரன் என்று 98 ஐ கழித்தால் மீதி 114 பேர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.

எனவே, இந்த 22 தொகுதிகளில் 3 அல்லது தொகுதிகளில் அ.தி.மு.க. வென்றாலே மெஜாரிட்டிக்கு தேவைப்படும் மேஜிக் நம்பர் 117ஐ தாண்டி விடலாம்.

ஆனால், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாகவே இருந்தால், தி.மு.க. தரப்பில் உடனடியாக எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீ்ர்மானத்தை கொண்டு வருவார்கள்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தால், இப்போது பா.ஜ.க. அரசுக்கு தலையாட்டும் ஆளுநர், அப்போது புதிய ஆட்சிக்கு தலையாட்டத் தொடங்கி விடுவார். அப்போது எடப்பாடி அரசை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு இதே ஆளுநர் புரோகித் உத்தரவிடும் நிலைமை வரலாம்.

அந்த சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கவும் அரசு தயாராக இருக்க வேண்டும். எனவே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூவரையும் தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்பது ஆளும் அ.தி.மு.க.வின் திட்டம்!

அவர்கள் மூவரும் தாங்கள் எடப்பாடி அரசுக்கு ஆதரவாகவே இருப்போம் என்று ஓங்கிச் சொன்னால் போதும். சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. கொடுத்தாலும் கூட, இந்த 117 கணக்கைச் சொல்லி, தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கே சபாநாயகர் எடுத்து கொள்ளாமல் தவிர்த்து விடலாம்.

அதனால்தான், அந்த மூவருக்கும் சபாநாயகர் தனபால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் ஒரு வார கால அவகாசம்தான் கொடுத்திருக்கிறார். எனவே, தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே அந்த மூவரும் சபாநாயகர் முன்பாக ஆஜராகி அ.தி.மு.க. ஆதரவு நிலை எடுப்பார்கள் என்பது ஆளும்கட்சி போடும் கணக்கு.

சரி. ஒரு வேளை இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு நான்கு சீட் கூட கிடைக்காமல் போய் விட்டால்? அதற்குத்தான் சபாநாயகர் இப்போது தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 3 எம்.எல்.ஏ.க்களின் மீது கத்தியை தீட்டியிருக்கிறார். அவர்கள் கொடுக்கும் விளக்கத்தை பெற்று கொண்டு முடிவை அறிவிக்காமல், மே 23ம் தேதி வரை சபாநாயகர் காத்திருப்பார். இடைத்தேர்தலில் மூன்று சீட் கூட அ.தி.மு.க. பெறாமல் தோற்று விட்டால், இந்த மூவரையும் தகுதி நீக்கம் செய்வார். அப்போது சட்டசபையில் மொத்த எண்ணிக்கை 231 ஆக குறையும்.

அதே சமயம், தி.மு.க. 19 தொகுதிகளில் வென்றால்தான் தற்போதுள்ள 97 எண்ணிக்கையுடன் சேர்த்து மெஜாரிடிக்கான 116 இடங்களை பெற முடியும். ஆனால், தி.மு.க. 19 இடங்களில் வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகம். அந்த சூழலிலும் எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்த்து விடலாம் என்று நினைக்கிறது அ.தி.மு.க.!

இதை தி.மு.க.வும் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறது. அதனால்தான், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் மிகவும் புத்திசாலித்தனமாக காய் நகர்த்தியிருக்கிறார். அதாவது, ‘‘அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்தால்தானே அதை வாக்கெடுப்புக்கு எடுத்து கொள்ளாமலேயே தவிர்ப்பீர்கள், நாங்கள் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுக்கிறோம். அதில் தினகரனும் சேர்ந்தே வாக்களிப்பார்.

அவருக்கு ஆதரவாக உள்ள மூன்று எம்.எல்.ஏ.க்களும் கூட சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்கலாம். அதே போல், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தால் கருணாஸ், தமிமும் அன்சாரி ஆகியோரும் கூட வாக்களிப்பார்கள். அப்போது ஆட்சி தானாக விழுந்து விடும்’’ என்பது ஸ்டாலின் போடும் கணக்கு!

மேலும், சபாநாயகர் மீது அரசியல் சட்டப்பிரிவு 179(அ)ன் கீழ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. கொடுத்திருக்கிறது. இந்த தீர்மானத்தை 14 அவகாசம் கொடுத்து பின்பு சட்டசபையில் வாக்கெடுப்புக்கு விட்டாக வேண்டும். அந்த அடிப்படையில், எடப்பாடி அரசை எப்படியும் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தச் செய்து விட வேண்டும் என்பது தி.மு.க.வின் கணக்கு!

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இப்போது ஆடு புலி ஆட்டத்தை தொடங்கி விட்டாலும் வெற்றி, தோல்வி என்பது நடுவர் கையில்தான் உள்ளது. நடுவராக இங்கே இருப்பது நடுவண் அரசு! அதனால், மத்தியில் யார் ஆட்சிப் பீடத்தில் உட்கார்கிறார்களோ, அதைப் பொறுத்தே தமிழக அரசியலிலும் மாற்றம் நிகழும் என்பதில் சந்தேகமில்லை!

You'r reading ஸ்டாலின் vs சபாநாயகர்! சபாஷ், சரியான போட்டி... Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை